கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதிக்கு உட்பட்ட காளிபாளையம் பகுதியில் அமைந்துள்ள அன்னை ப்ளூ மெட்டல் கல்குவாரி அனுமதி பெறாமல் செயல்பட்டதாக கனிமவளத்துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டு, சமீபத்தில் இழுத்து மூடப்பட்டது. இந்த முன்விரோதம் காரணமாக விவசாயி ஜெகநாதன் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த குவாரியின் உரிமையாளர் செல்வகுமார் உள்ளிட்ட மூன்று நபர்களால் அண்மையில் கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கு சம்பந்தமாக மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது உள்ளிட்ட சமூக ஆர்வலர்களைக் கொண்ட எட்டு பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழு இன்று கரூர் வருகை தந்துள்ளது. காளிபாளையம் பகுதியில் அமைந்துள்ள ஜெகநாதன் வீடு, கொலை நடந்த இடம், சம்பந்தப்பட்ட கல் குவாரி உள்ளிட்ட பகுதிகளில் தற்போது நேரில் ஆய்வு மேற்கொண்ட அவர்கள், சாட்சிகள் மற்றும் அதிகாரிகளை நேரில் சந்தித்து விசாரணை மேற்கொண்டு வழக்கு சம்பந்தமான விபரங்களை கண்டறிய வந்துள்ளனர். இந்த உண்மை கண்டறியும் குழு கள ஆய்வு முடித்த பின் இன்று மாலை கரூரில் செய்தியாளர்களை சந்தித்து ஜெகநாதன் கொலை வழக்கு சம்பந்தமான முக்கிய ஆதாரங்களை சமர்ப்பிக்க உள்ளனர்.