விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகில் உள்ள நல்லாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் 36 வயது ஏழுமலை. விவசாயியான இவர் நேற்று முன்தினம் கூலிக்கு வயல் வேலைக்குச் சென்றுள்ளார். காலை உணவு சாப்பிடும் நேரத்தில் தன்னுடன் வேலை செய்தவர்களிடம் தான் சாப்பிட்டு விட்டு வருவதாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளார். அதன் பிறகு நீண்ட நேரம் ஆகியும் அவர் வேலைக்கு வரவில்லை சொந்த வேலையாக எங்கே சென்றுவிட்டார் என்று எல்லோரும் எண்ணியுள்ளனர். ஆனால் அன்று இரவு வெகு நேரமாகியும் ஏழுமலை வீட்டுக்கு வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர், உறவினர்கள் வீடுகளில் எல்லாம் விசாரித்தும் அவரைப் பற்றி எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
இதைத் தொடர்ந்து நேற்று காலை அவரது குடும்பத்தினர் உறவினர்கள் ஏழுமலையின் வயல் பாசனப் பகுதியில் உள்ள கிணற்றுக்குச் சென்றுள்ளனர் அங்குள்ள பம்பு செட்டு கொட்டகையில் வாழை இலையில் பாதி உணவு சாப்பிட்டதும் சாப்பிடாததுமாக இருந்துள்ளது. இலையின் அருகில் ஏழுமலை பயன்படுத்தி வந்த செல்போன் இருந்துள்ளது.
இதனால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் கண்டாச்சிபுரம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். அவர்கள் வேட்டவலம் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் அளித்து தீயணைப்பு நிலைய அலுவலர்களுடன் ஏழுமலையின் பாசன கிணற்றுக்கு விரைந்து சென்று கிணற்றுக்குள் இறங்கி அவரைத் தேடினர். ஒரு மணி நேரம் தேடி ஏழுமலையைச் சடலமாக மேலே கொண்டு வந்தனர். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இதையடுத்து ஏழுமலையின் மனைவி சுசீலா கண்டாச்சிபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் ஏழுமலையின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஏற்கனவே ஏழுமலைக்கு வலிப்பு நோய் இருந்துள்ளதும் தெரிய வருகிறது.