ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கோட்டுகுள்ளாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருண்குமார்(38). கீழ்பவானி வாய்க்கால் பாசனப் பகுதி அருகே இவருக்குச் சொந்தமாக 4 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலம் அருகே கீழ்பவானி வாய்க்கால் பாசனப்பகுதியில் புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த புறம்போக்கு நிலத்தில் மழை மற்றும் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் விடும் பொழுது அந்த தண்ணீர் அருண்குமார் நிலத்தில் பயிரிட்டுள்ள பயிர்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி விடுகிறது.
இது சம்பந்தமாக அருண்குமார் கடந்த 6 ஆண்டுகளாக முதலமைச்சர் தனிப்பிரிவு, ஆட்சியர், அமைச்சர், ஆர்.டி.ஓ , தாசில்தார், நீர்வளத்துறை அதிகாரிகள் எனப் பலரிடம் மனு கொடுத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை அருண்குமார் தனது மனைவி, மாமியார், மகள்களுடன் கோபிசெட்டிபாளையம் கோபி - மொடச்சூர் ரோட்டில் உள்ள கீழ பவானி பாசனப் பகுதி அலுவலகத்திற்கு வந்தார். திடீரென அலுவலகம் நுழைவாயில் முன்பு அருண்குமார் தனது மனைவி, மாமியார், மகள்களுடன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோபிசெட்டிபாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அருண்குமாரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அவரிடம் உங்கள் கோரிக்கை குறித்து உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை அடுத்து அருண்குமார் தனது தர்ணா போராட்டத்தைக் கைவிட்டு தனது குடும்பத்தினருடன் அங்கிருந்து சென்றார்.