சேலம் அருகே, கடன் தொகையை வட்டியுடன் திருப்பிச் செலுத்திய பிறகும், பிணையமாக கொடுத்திருந்த நிலப் பத்திரத்தைத் தராமல் விவசாயியை மோசடி செய்த நபர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள கட்டிப்பாளையம் பெரிய காடு பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி (65). விவசாயியான இவர் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி கடத்தூர் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவரிடம் 19 லட்ச ரூபாய் கடன் வாங்கியுள்ளார். கடன் தொகைக்கு பிணையமாக சேலம் அருகே வீரபாண்டியில் உள்ள தனக்குச் சொந்தமான 1.22 சென்ட் நிலம், ஒரு கிணறு ஆகியவற்றுக்கான தாய் பத்திரத்தை முருகேசனிடம் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், அசல் கடன் மற்றும் வட்டி என மொத்தம் 38.61 லட்ச ரூபாயை முருகேசனிடம் செலுத்தியுள்ளார். அதன்பிறகும் பழனிசாமிக்குச் சொந்தமான நிலம் மற்றும் கிணற்றுக்கான அசல் பத்திரத்தைத் திருப்பிக் கொடுக்காமல் முருகேசன் இழுத்தடித்து வந்துள்ளார். இந்நிலையில், டிசம்பர் 28 ஆம் தேதி கடத்தூர் அக்ரஹாரத்திற்கு வந்த பழனிசாமி தனது பத்திரத்தைக் கொடுத்து விடும்படி முருகேசனிடம் கேட்டுள்ளார்.
அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பழனிசாமி ஆட்டையாம்பட்டி காவல்நிலையத்தில் முருகேசன் தன்னிடம் 19 லட்சம் ரூபாய் கடனுக்கு வட்டி, வட்டிக்கு வட்டி என மொத்தம் 38.61 லட்ச ரூபாய் வசூலித்துள்ளார் என்றும், அசல் பத்திரத்தைக் கொடுக்காமல் ஏமாற்றி வருவதாகவும் புகார் அளித்தார். காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.