
சேலத்தில் பிரபல ரவுடி முட்டைக்கண்ணன் என்கிற பிரேம்குமாரை இரண்டாவது முறையாக குண்டாசில் போலீசார் கைது செய்தனர்.
சேலம் தாதகாப்பட்டி அம்பாள் ஏரி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முட்டைக்கண்ணன் என்கிற பிரேம்குமார் (49). கடந்த ஜூன் 18ம் தேதி பிரேம்குமாரும் அவருடைய சகோதரர் வெங்கடேசனும் சேர்ந்து கொண்டு, மேட்டுத்தெருவில் வசிக்கும் அவர்களுடைய சித்தப்பா சொக்கலிங்கத்திடம் (62) சொத்துகளை தங்கள் பெயரில் எழுதிக்கொடுக்குமாறு மிரட்டினர். அப்போது ஏற்பட்ட மோதலில் சொங்கலிங்கத்தை, பிரேம்குமார் கத்தியால் குத்திக் காயப்படுத்தினார்.
பலத்த காயம் அடைந்த அவர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து சொக்கலிங்கம் அன்னதானப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். ஜூன் 18ம் தேதியன்று பிரேம்குமாரை கைது செய்த காவல்துறையினர், நீதிமன்ற உத்தரவின்பேரில் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். அவருக்கு உதவியாக வந்த ரவுடி பல்சர்குமார் என்கிற கிருஷ்ணகுமாரும் கடந்த 12ம் தேதி கைது செய்யப்பட்டார்.
ரவுடி பிரேம்குமார் மீது ஏற்கனவே டாஸ்மாக் கடையில் கத்தி முனையில் பணம் கேட்டு தகராறு செய்தது, அன்னதானப்பட்டியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது, சொத்து தகராறில் தன் சகோதரனை பீர் பாட்டிலால் குத்திக் கொல்ல முயன்றது என பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
தொடர் குற்றத்தில் ஈடுபட்டு வந்த அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் துணை கமிஷனர் சுப்புலட்சுமி, மாநகர காவல்துறை ஆணையர் சங்கருக்கு பரிந்துரை செய்தார். அவர் அனுமதி அளித்ததை அடுத்து, பிரேம்குமாரை இரண்டாவது முறையாக குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். ஏற்கனவே கடந்த 2010ம் ஆண்டு பிரேம்குமார் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது குறிப்பிடத்தக்கது.