Skip to main content

பழிக்குப் பழி; ஸ்ரீரங்கத்தில் பிரபல ரவுடி ஆட்டுக்குட்டி சுரேஷ் படுகொலை!

Published on 23/09/2024 | Edited on 23/09/2024
Famous rowdy aattukutty Suresh incident in Srirangam

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்தவர் தலைவெட்டி சந்துரு (எ) சந்திரமோகன். இவர் கடந்த 2020-ம் ஆண்டு ஸ்ரீரங்கம் ரயில்வே பாலம் பகுதியில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் அருகே உள்ள பி கிளாஸ் ரயில்வே குடியிருப்பைச் சேர்ந்த பூக்கட்டும் தொழில் செய்து வரும் பிரபல ரவுடி ஆட்டுக்குட்டி சுரேஷ் (எ) சுரேஷ்(35), அவரது அண்ணன் சரவணன் உள்ளிட்டோரை கைது செய்தனர். 

இந்நிலையில், ஜாமீனில் வெளியே வந்த ஆட்டுக்குட்டி சுரேஷ் சில காலம் வெளியூரில் தங்கி இருந்தார். பழனி முருகன் கோவிலுக்கு மாலை அணிவித்து விரதம் இருந்தார். இந்தநிலையில் தனது மனைவி ராகினியுடன் நவல்பட்டு பகுதியில் உள்ள கோயிலுக்குச் சென்றுவிட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தார். அம்பேத்கர் நகர் சுடுகாடு அருகே உள்ள தேங்காய் குடோன் அருகே வந்தபோது, 3 இருசக்கர வாகனத்தில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், சுரேஷ் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது மோதினர். இதில் சுரேஷ் அவரது மனைவி ராகினி இருவரும் கீழே விழுந்தனர். பின்னர், 5 பேர் சூழ்ந்து கொண்டு, சுரேஷை சரமாரியாக வெட்டினர். தடுக்கச் சென்ற அவரது மனைவி ராகினிக்கும் காலில் வெட்டு விழுந்தது. இதில் சுரேஷின் தலைப்பகுதி முழுவதும் சிதைக்கப்பட்டது.

வெட்டுப்பட்ட சுரேஷ் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த திருச்சி மாநகர துணை ஆணையர் செல்வகுமார், ஸ்ரீரங்கம் உதவி ஆணையர் நிவேதாலட்சுமி, இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று, சுரேஷ் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மேலும், அவரது மனைவி ராகினியை திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், இச்சம்பவத்தில் தொடர்புடைய 4 பேர் போலீஸாரிடம் சரணடைந்ததாகக் கூறப்படுகிறது. தலைவெட்டி சந்துரு, ஆட்டுக்குட்டி சுரேஷ் ஆகியோர் ஒன்றாக ஸ்ரீரங்கம் சத்தாரவீதியில் உள்ள பூ மார்க்கெட்டில் இனாம் பூக்களை வாங்கி வியாபாரம் செய்து வந்தனர். இதில் ஏற்பட்ட மோதல் காரணமாக தலைவெட்டி சந்துரு கொலை செய்யப்பட்டார். அதை தொடர்ந்து தற்போது பழிக்குப்பழியாக ஆட்டுக்குட்டி சுரேஷ் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்