நூறுக்கும் மேற்பட்ட ரவுடிகளுடன் அரிவாளால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய பிரபல ரவுடி பினுவை போலீசார் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
சென்னையைச் சேர்ந்தவர் பினு. பிரபல ரவுடி. இவர்மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் ஆள்கடத்தல், கொலை, அடிதடி வழக்குகள் உள்ளன. கடந்த ஆண்டு இவருடைய பிறந்தநாளின்போது 100க்கும் மேற்பட்ட ரவுடிகள் ரகசியமான இடத்தில் ஒன்றுகூடியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் பத்துக்கும் மேற்பட்ட தனிப்படைகளாக பிரிந்து சென்று, அந்த இடத்தை சுற்றி வளைத்தனர். போலீசாரின் அதிரடி வேட்டையில் 75 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். பினு உள்ளிட்ட பலர் தப்பியோடிவிட்டனர். ஒரே இரவில், இத்தனை ரவுடிகள் கைது செய்யப்பட்டிருப்பதும் தமிழக காவல்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்தக் கூட்டத்தில் ரவுடி பினு, நீளமான வீச்சரிவாளால் தனது பிறந்தநாளுக்காக வாங்கி வந்திருந்த கேக்கை வெட்டி கொண்டாடியது தெரிய வந்தது. சில ரவுடிகள் அதை வீடியோ எடுத்து, சமூக ஊடகங்களில் பரவ விட்டிருந்தது பரபரப்பாக பேசப்பட்டது.
தலைமறைவாக இருந்த பினுவை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். அப்போது அவர் தான் ரவுடி இல்லை என்று புலம்பினார். பின்னர், ஜாமினில் வெளியே வந்த அவர் தலைமறைவாகிவிட்டார்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு போலீசார் மீண்டும் அவரை கைது செய்து, சென்னை புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், திடீரென்று பினுவை அங்கிருந்து சேலம் மத்திய சிறைக்கு ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 28, 2018) கொண்டு வந்தனர்.
நிர்வாகக் காரணங்களுக்காக அவர் சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் அவருக்கு எதிரான கோஷ்டிகள் புழல் சிறையில் இருப்பதால், அவர்களால் பினுவுக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்பதால்தான் சேலம் சிறைக்கு மாற்றப்பட்டதாகவும் ஒரு தகவல் உலா வருகிறது.