சென்னையைத் தொடர்ந்து கோவை மாநகரம் தகவல் தொழில்நுட்ப மையமாக உருவாகி வருகிறது. கோவையில் பெரிய நிறுவனங்கள் தங்களது அலுவலகங்களை அமைத்து வரும் நிலையில், மேலும், பல முன்னணி நிறுவனங்கள் தங்கள் கிளைகளை அங்கு நிறுவி வருகின்றன.
கோவையில் தங்கள் நிறுவனத்தின் கிளையை அமைக்கப்போவதாக அறிவித்துள்ள இன்போசிஸ் நிறுவனம், ஐந்து ஆண்டுகளில் 2,100 கோடி ரூபாயை முதலீடு செய்யவுள்ளது. இதற்காக, 2,300 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர். ஏற்கனவே, கோவையில் காக்னிசென்ட் (Cognizant), அமேசான், ஹெச்சிஎல், விப்ரோ, டிசிஎஸ் உள்பட பல முன்னணி நிறுவனங்கள் கால் பதித்துள்ளதால், கோவை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள பட்டதாரிகள், பொறியாளர்கள் மத்தியில் வரவேற்பும், நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2015- ஆம் ஆண்டு மழை, வெள்ளத்தால் சென்னை பாதிக்கப்பட்டது. சென்னை மாநகரத்தில் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட காரணங்களால் கோவை, திருச்சி, மதுரை போன்ற நகரங்களை நோக்கி வரத் தொடங்கியிருக்கின்றன ஐ.டி. நிறுவனங்கள். இதில், சென்னைக்கு அடுத்ததாக கோவை பல முதலீட்டாளர்களை ஈர்ப்பதாக இத்துறையினர் கூறுகிறார்கள்.
சென்னையை ஒப்பிடுகையில் கோவையில் மக்கள் தொகை குறைவு என்பதோடு, புதிய பாலங்கள், மெட்ரோ ரயில் திட்ட அறிவிப்பு போன்றவை ஐ.டி. நிறுவனங்களை கவரும் காரணிகளாகக் கூறப்படுகிறது.