
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே குடும்ப தகராறு காரணமாக திருமண நாளிலேயே இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரித்துவருகின்றனர்.
மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் கானாபாடிபுதூரைச் சேர்ந்த அந்தோனியம்மாள் – சூசை தம்பதியின் மகள் திவ்யா ஜெரினா என்பவருக்கும், அஞ்சல்காரன்பட்டியை அடுத்த சீத்தப்பட்டியைச் சேர்ந்த சுசிலாமேரி – அந்தோனிசாமி தம்பதியின் மகனான பெயிண்டிங் வேலை செய்துவரும் அகஸ்டின் ராபர்ட் என்பவருக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. தற்போது இவர்களுக்கு இரண்டரை வயதில் ஒரு மகனும், 6 மாத மகளும் உள்ளனர். அவ்வப்போது கணவன் மனைவிக்கிடையே குடும்பத்தார்களால் தகராறு ஏற்பட்டுவந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், திருமண நாளான நேற்றும் (14.12.2021) கணவன் – மனைவிக்கிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, அகஸ்டின் ராபர்ட் வேலைக்குச் சென்றுள்ளார். வீட்டில் இருந்தவர்களும் வெளியே சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த திவ்யா ஜெரினா, சேலையில் தூக்கிட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. வீடு திரும்பிய உறவினர்கள் நிகழ்வு குறித்து அளித்த தகவலின்பேரில் நிகழ்விடத்துக்குச் சென்ற போலீசார், திவ்யா ஜெரினா உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்குப் பின் மாலையில் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
திவ்யா ஜெரினா உயிரிழப்பு குறித்து முன்னதாக ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் சிந்துஜா விசாரணை மேற்கொண்டார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள வையம்பட்டி போலீசார், திவ்யா ஜெரினா உயிரிழப்பு குறித்து விசாரணை மேற்கோண்டுவருகின்றனர். திருமண நாளிலேயே இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கிராமத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.