விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே உள்ள செண்டுர் (சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ளது இந்த ஊர்) ஊரைச் சேர்ந்தவர் செந்தாமரைக்கண்ணன். இவரது மனைவி ஜெயந்தி. இவர்கள் இருவருமே விவசாயக் கூலி வேலை செய்து, அதில் வரும் வருமானத்தின் மூலம் தங்கள் குடும்பத்தை நடத்திவருகிறார்கள்.
இவர்கள் வீட்டிற்கு மந்திரவாதி போன்ற மனிதர் நேற்று (11.08.2021) வந்துள்ளார். அவர், ஜெயந்தி மற்றும் செந்தாமரைக்கண்ணன் இருவரிடமும், “உங்கள் குடும்பத்தில் யாருக்காவது கை, கால், இடுப்பு, கழுத்து போன்ற இடங்களில் தீராத வலி உள்ளதா? அப்படியிருந்தால் அந்த வலியை உடனடியாக என்னால் சரி செய்ய முடியும்” என்று கூறியுள்ளார்.
அவரது பேச்சில் கணவன் மனைவி இருவரும் மயங்கி உடனே ஜெயந்தி, தனக்கு அதுபோன்று உடல், கை, கால்களில் வலி இருப்பதாக கூறியுள்ளார். உடனே அவர்கள் வீட்டில் அமர்ந்த மந்திரவாதி, ஜெயந்தியின் கையைப் பிடித்து சிறிது நேரம் நாடி பார்த்த பிறகு, “உங்கள் வீட்டில் உங்களுக்கு எதிரியானவர்கள் ‘செய்வினை, பில்லி, சூனியம்’ போன்றவற்றை ஏவி விட்டுள்ளனர். அதனால்தான் கணவன் - மனைவி இருவருக்கும் அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போனது. நீங்கள் எவ்வளவு கடுமையாக உழைத்து சம்பாதித்தாலும் உங்களிடம் பணம், காசு தங்காது. எனவே உங்களுக்கு நிம்மதி இருக்காது. அதற்குக் காரணம், உங்கள் குடும்பத்தின் மீது ஏவி விடப்பட்டுள்ள பில்லி, சூனியம், மந்திரவித்தைகள்தான். அவற்றை உடனே விரட்ட வேண்டும். அதற்கு பெரிய அளவில் நீங்கள் செலவு எதுவும் செய்ய வேண்டாம். உங்கள் வீட்டில் உள்ள தங்க நகையை என்னிடம் எடுத்துவந்து கொடுங்கள். அந்த நகையை உங்கள் ஊர் எல்லையில் உள்ள மூன்று கோவில்களில் வைத்து பூஜை செய்து, மீண்டும் உங்களிடம் எடுத்து வந்து தருகிறேன். அதை அணிந்தவுடன் உங்களுக்கு ஏற்பட்டுள்ள கை, கால் வலி உடனடியாக நீங்கும். உங்கள் குடும்பத்திற்கு எதிராக ஏவி விடப்பட்ட அனைத்து மாய மந்திரங்கள், பில்லி, சூனியம், ஏவல் போன்றவையும் மாயமாய் மறைந்துபோகும்” என்று கூறியுள்ளார்.
மகுடிக்குக் கட்டுப்பட்ட நாகம் போல, அவரது பேச்சுக்கு கணவன் - மனைவி இருவரும் தலையசைத்து சம்மதம் தெரிவித்தனர். உடனே ஜெயந்தி, வீட்டில் இருந்த இரண்டு பவுன் நகையை எடுத்துவந்து மந்திரவாதியிடம் கொடுத்துள்ளார். அந்த நகையை ஊர் எல்லையில் உள்ள கோயில்களில் வைத்து வழிபாடு செய்து, மீண்டும் எடுத்து வருவதாகக் கூறிச் சென்ற மந்திரவாதி, பலமணி நேரமாகியும் திரும்பி வரவில்லை. அதன் பிறகுதான், கணவன் - மனைவி இருவரும் சுயநினைவுக்கு வந்துள்ளனர். உடனே அக்கம்பக்கத்தினரிடம் மந்திரவாதி தங்களிடம் நகையைப் பறித்துச் சென்ற சம்பவத்தைக் கூறியுள்ளனர்.
இதையடுத்து அந்தப் பகுதி முழுவதும் நகையைப் பறித்துச் சென்ற மந்திரவாதியை ஊர் மக்கள் தேடிப் பார்த்தனர். ஆனால், மந்திரவாதி மாயமாகிவிட்டார். இதையடுத்து மயிலம் காவல் நிலையத்தில் செந்தாமரைக்கண்ணன், ஜெயந்தி இருவரும் புகார் அளித்துள்ளனர். அவர்களது புகாரின் பேரில் நகையை ஏமாற்றிப் பறித்துச் சென்ற மந்திரவாதியைப் போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.
இதுபோன்ற அப்பாவி ஏழை எளிய மக்களிடம் மந்திரவாதிகள் பில்லி, சூனியம், ஏவல், சரியில்லாத உடல்நிலையை சரியாக்குவதாகக் கூறி அவர்களிடம் இருக்கும் பணத்தையும், நகைகளையும் அபகரித்துச் செல்லும் சம்பவம் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தற்போது அதிகரித்துவருகிறது. காவல்துறை இதுபோன்ற போலி மந்திரவாதிகளை அடையாளம் கண்டு விரைந்து கைது செய்து சிறையிலடைக்க வேண்டும் என்கிறார்கள் அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும்.
இதேபோன்ற இரண்டு தினங்களுக்கு முன்பு கள்ளக்குறி மாவட்டத்தில், போலி மந்திரவாதி ஒருவர் நூதன முறையில் 11 சவரன் நகையை ஏமாற்றி கொள்ளை சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.