தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கிக் கடந்த சில நாட்களாகப் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் நேற்று இரவு முதல் இடைவிடாது மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் சென்னையின் பல்வேறு இடங்களில் குளம் போல மழை நீர் தேங்கியுள்ளது. இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதனையொட்டி சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை கொரட்டூர் இந்தியன் பேங்க் வாசலில் இருந்த பழமையான மரம் ஒன்று முறிந்து விழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மழை நேரமாக இருந்தாலும் அந்த வழியாக பரபரப்பாக வாகனங்கள் சென்று கொண்டிருந்த நிலையில் மரமானது முறிந்து விழுந்தது. இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருந்தது. மரம் முறிந்து விழுவதற்கு சற்றுமுன் இருசக்கர வாகனத்தில் ஒரு நபர் கடந்த நிலையில் நூலிழையில் அந்த நபர் உயிர் தப்பினார். இந்த விபத்தில் அந்த மரத்தின் கீழ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.