Skip to main content

பச்சை மிளகாய் விலை வீழ்ச்சி - விவசாயிகள் கவலை

Published on 06/03/2018 | Edited on 06/03/2018
milaka

  

 கீரமங்கலம், கொத்தமங்கலம், வடகாடு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பச்சை மிளகாய் விளைச்சல் அதிகரித்து விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் கட்டுபடியான விலை கிடைக்கவில்லை என கவலையடைந்துள்ளனர். 

 

    புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், செரியலூர், கறம்பக்காடு, கொத்தமங்கலம், வடகாடு, மாங்காடு, அணவயல், பனங்குளம், குளமங்கலம், மேற்பனைக்காடு, பாண்டிக்குடி, சேந்தன்குடி, நகரம், நெய்வத்தளி, மறமடக்கி, அரசர்குளம் மற்றும் சுற்றியுள்ள சுமார் 100 கிராமங்களில் விவசாயிகள் பச்சை மிளகாய் வழக்கமாக அதிமாக சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக மேலும் கூடுதலாக மிளகாய் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. 

 

    வழக்கம் போல இந்த ஆண்டும் பச்சை மிளகாய் விவசாயம் கூடுதலாக விவசாயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ 25, முதல் 50 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு ரூ. 6 க்கும் குறைவாக விற்ப்பனை செய்யப்படுவதால் விவசாயிகளுக்கு நட்டம் ஏற்படுகிறது என்று கவலையடைந்துள்ளனர். 


    இது குறித்து விவசாயிகள் கூறும் போது.. மிளகாய் உற்பத்தி கீரமங்கலம் பகுதியில் தான் அதிகமாக உள்ளது என்பதால் தான் தமிழகத்தின் மிளகாய் மொத்த வியாபாரம் கீரமங்கலத்தை மையமாக வைத்து நடக்கிறது. ஆனால் தற்போது பச்சை மிளகாய் விற்பனை விலை குறைந்துவிட்டது விவசாயிகளை கடனாளிகளாக்கி வருகிறது. கடந்த ஆண்டுகளில் பச்சை மிளகாய் விவசாயிகளுக்கு கட்டுபடியான விலை கிடைத்தது என்பதால் இந்த ஆண்டு அதிகமாக விவசாயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே விலை ரூ. 10 க்கு குறைவாகவே உள்ளது. 


    விதை, உரம், மருந்து, சம்பள ஆள் இப்படி செலவு அதிகமாகிவிட்டது. ஆனால் விற்பனை குறைந்துள்ளதால் செலவுக்கு கூட வருவாய் இல்லாமல் இழப்பு ஏற்படுகிறது என்கின்றனர் விவசாயிகள்.

 

    கீரமங்கலம் பகுதி பச்சை மிளகாய் கொள்முதல் செய்யும் விவசாயிகள் கூறும் போது.. கீரமங்கலம், கொத்தமங்கலம், மறமடக்கி, வடகாடு, புளிச்சங்காடு கைகாட்டி, குளமங்கலம், பனங்குளம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள கமிசன் கடைகளுக்கு ஒரு நாளைக்கு சுமார் 40 டன் வரை பச்சை மிளகாய் விவசாயிகளிடம் இருந்து விற்பனைக்கு வருகிறது. வியாபாரிகள் வாங்கும் பச்சை மிளகாய்களை மதுரை, கும்பகோணம், ஒட்டன்சத்திரம் சந்தைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஆனால் அங்கு விலை குறைவாக உள்ளதால் விவசாயிகளுக்கும் குறைந்த விலையே கொடுக்க முடிகிறது. மேலும் தேங்காய் விலை உயர்வால் ஹோட்டல்களில் தேங்காய் சட்னி வைப்பது குறைந்துவிட்டதால் சட்னிக்கு பயன்படுத்தும் பச்சை மிளகாய் பயன்படுத்துவதும் குறைந்துவிட்டது. அதனாலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பச்சை மிளகாய் உற்பத்தி அதிகமாக சந்தைகளுக்கு வருவதாலும் கீரமங்கலம் பகதியில் விலை குறைவாக உள்ளது என்றனர்.

    இதே விலை நீடித்தால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படும்.
 

சார்ந்த செய்திகள்