Skip to main content

போலி பயிற்சியாளர் ஆறுமுகத்தை காவலில் எடுத்து விசாரிக்க மனு!!

Published on 14/07/2018 | Edited on 14/07/2018

கோவை கல்லூரியில் பேரிடர் பயிற்சியின் போது கல்லூரி மாணவி இறந்த சம்பவத்தில் தொடர்புடைய போலி பயிற்சியாளர் ஆறுமுகத்தை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க மனு அளிக்கப்பட்டுள்ளது.

கோவை நரசிபுரத்தில் கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் இரண்டாமாண்டு பிபிஏ பட்டப்படிப்பு படித்து வருகிறார் 19 வயதான லோகஸ்வரி என்ற மாணவி. இவரது தந்தை நல்லாகவுண்டர். நாதேகவுண்டன் புதூரில் வசித்து வருகிறார். 

 

kovai

 

 

 

இந்நிலையில் நேற்று கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை மற்றும் முதலுதவி பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மேலாண்மை படையைச் சேர்ந்த பயிற்சியாளர் ஆறுமுகம் 20 மாணவர்களுக்கு நேற்று மாலை 4 மணியளவில் பயிற்சி அளித்தார்.

அப்போது இரண்டாவது மாடியில் இருந்து பேரிடர் காலங்களில் எப்படி தப்பித்துக்கொள்வது என்பது பற்றி செய்முறைப்பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அப்போது, லோகேஸ்வரி என்ற மாணவி கீழே குதிக்க பயந்தபடி அமர்ந்திருந்தார். அவரை கீழே குதிக்கும்படி தெரிவித்த பயற்சியாளர் ஆறுமுகம் லோகேஸ்வரியை கீழே தள்ளிவிட்டுள்ளார்.


அதில், நிலைதடுமாறி முதல் மாடியில் இருந்த சன் சேடின் மேலே விழுந்த லோகேஸ்வரியின் பின் தலையிலும் வலது கழுத்துப்பகுதியிலும் அடிபட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக லோகேஸ்வரி அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். அங்கிருந்த மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 

kovai

 

 

 

அரசு மருத்துவமனையில் லோகேஸ்வரி வரும் வழியில் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியதை அடுத்து பிரேத பரிசோதனைக்கு அவரது உடல் அனுப்பி வைக்கப்பட்டது. பெரும்பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் தொடர்புடைய பயிற்சியாளர் ஆறுமுகம் போலி சான்றிதழ்கள் மூலம் தான் பேரிடர் பயிற்சியாளர் எனக்கூறி  பல கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் பேரிடர் பயிற்சி முகாமை நடத்தியது தெரியவந்தது.

 

 

 

இது குறித்து ஆலாந்துறை காவல் துறையினரால் போலி பயிற்சியாளர் ஆறுமுகம் கைது செய்யப்பட்டு கோவை இரண்டாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மேலும் ஆறுமுகத்திற்கு 27-ஆம் தேதிவரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. இந்நிலையில் ஆறுமுகத்தை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் ஒரு வாரம் போலீஸ் காவலில் எடுத்து ஆறுமுகத்தை விசாரிக்க அனுமதி வேண்டும் என கேட்கபட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்