தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் புதுக்கோட்டையை தவிர மற்ற மாவட்டங்களில், கரோனா பாதித்தவர்கள் மொத்தம் 115 பேர் உள்ளனர். இதில் டெல்லி நிகழ்ச்சி மற்றும் வெளிநாடு சென்று திரும்பியவர்களை சுகாதாரத்துறை கண்டறிந்து அவர்களை சிகிச்சைக்காக அழைத்து வருகின்றனர்.
வெளிநாட்டிற்கு செல்லாத ஒருவரை வெளிநாட்டுக்கு சென்றதாக கட்டாயப்படுத்தி அழைத்து, சோதனைக்கு உட்படுத்தி அரசு மருத்துமனையில் சிகிச்சை அளித்து வருகின்ற சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், வாலவந்தி பகுதியை சேர்ந்த இவர் அந்த பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். இவர்கள் குடும்பத்தினர் தொடர்ந்து தலைமுறை, தலைமுறையாக மளிகைக்கடை நடத்தி வருபவர்கள். இந்த நிலையில் திடீர் என சுகாதாரதுறையினர் தாசில்தார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவரின் வீட்டிற்கு சென்று வெளிநாட்டில் இருந்து வந்தும், ஏன் இவ்வளவு நாளாக பரிசோதனைக்கு வரவில்லை என குண்டுக்கட்டாக தூக்கி 108 ஆம்புலன்சில் ஏற்றினர்.
ஆம்புலன்சில் ஏறும் போது கூட ஐயோ.. என் வாழ்க்கையில் நான் வெளிநாட்டுக்கு சென்றதே இல்ல..நீங்க நினைக்கிற ஆள் இல்ல என எவ்வளவோ கதறியும், விடாமல் அவரை காட்டாயப்படுத்தி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அவருடைய அபாயக்குரலை கேட்டு, அக்கம்பக்கத்து வீட்டினர் ஓடிவந்து இவர் இதுவரைக்கும் எந்த வெளிநாட்டுக்கும் சென்றதில்லையே நாங்க தினமும் இங்க தானே பார்க்கிறோம் இவர் எப்படி போயிருக்க முடியும் என்று வாக்குவாதம் செய்தும் அதிகாரிகள் எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளிக்க ஆரம்பித்தனர்.
இது குறித்து போலீசிடம் விசாரித்தபோது, போலி பாஸ்போர்ட் தயாரித்த மர்ம ஆசாமி இவரின் முகவரியை, பயன்படுத்தி வெளிநாடு சென்று வந்திருக்கிறார். தற்போது வெளிநாடு சென்று திரும்பியவர்கள் பட்டியலை நாங்கள் எடுத்தபோது இவரின் பெயரும், வீட்டு முகவரியும் வந்தால் இவர் தான் அவர் என்று நினைத்து அழைத்து சென்று விட்டோம். அப்போது உண்மையில் அவர் பெயரை பயன்படுத்தி வெளிநாட்டுக்கு சென்ற அந்த மர்ம ஆசாமி யார்? அவருக்கு கரோனா நோய் தொற்று அவருக்கு இருக்கிறதா என அந்த மர்ம ஆசாமியை கண்டுபிடிக்க வேண்டிய நெருக்கடி, திருச்சி போலீஸுக்கு பெரிய தலைவலியை கொடுத்திருக்கிறது.