Skip to main content

“இடிக்கப்பட்ட வீடுகளுக்கு மாற்றாக புதிய வீடு கட்ட நடவடிக்கை” -  நகர மன்றத் தலைவர்

Published on 11/01/2023 | Edited on 11/01/2023

 

Chairman city council meeting construction new houses demolished houses Chidambaram

 

சிதம்பரம் நகர மன்றக் கூட்டம் தலைவர் கே.ஆர். செந்தில்குமார் தலைமையில்  நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி ஆணையர் அஜிதா பர்வீன், பொறியாளர் மகாராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தக் கூட்டத்திற்கு நகரில் உள்ள 33 வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டு அவர்களின் வார்டுகளில் உள்ள குறைகள் குறித்துப் பேசினர். அப்போது மூத்த உறுப்பினர் ஜேம்ஸ் விஜயராகவன், “நகரில் கடந்த 10 ஆண்டுகளாக வசூலிக்கப்படாமல், தற்போது கெடுபிடியாக வரி வசூலிக்கப்படுகிறது. எனவே காலக்கெடு வழங்கி வசூலிக்க வேண்டும். பகுதி நேரம் மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும்” என்றார். 

 

உறுப்பினர் அப்பு சந்திரசேகரன் பேசுகையில், “ஒலிபெருக்கி மூலம் பொது வெளியில் கெடுபிடியாக வரி வசூலிப்பதால் மக்கள் மிகவும் வேதனை அடைகிறார்கள். இதற்கு அவர்கள் எங்களிடம் கேட்கும்போது ஏன் நகரமன்ற உறுப்பினரானோம் என்ற மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. இதற்கு தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பேசினார்.

 

வெங்கடேசன் பேசுகையில், “நகரில் குரங்குகளைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.” இதற்கு ஆணையர் அஜிதா பர்வீன் தெரிவிக்கையில் “வனத்துறையினர் மூலம் குரங்குகளைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். உறுப்பினர் தில்லை மக்கீன் பேசுகையில், “நகரில் உள்ள மணிக்கூண்டு கடிகாரங்களைச் சீரமைத்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நகரில் திரியும் பன்றி, நாய்களைப் பிடிக்க வேண்டும்” என்றார். நகர மன்றத் துணைத் தலைவர் முத்துக்குமரன் பேசுகையில், “33வது வார்டுக்கு உட்பட்ட இந்திரா நகர் பகுதியில் மழைக் காலங்களில் மார்பளவு தண்ணீர் வருகிறது. எனவே அந்தப் பகுதியில் உள்ள வாய்க்காலின் கரைகளை நிரந்தரமாக உயர்த்தினால் அப்பகுதியில் மழை நீர் உள்ளே வராது. எனவே நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனப் பேசினார். அதேபோல் நகரமன்ற உறுப்பினர்கள் சி.க.ராஜன், ஏஆர்சி.மணிகண்டன், தஸ்லிமா உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர்.

 

அதனைத் தொடர்ந்து உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்குப் பதில் அளித்து நகர மன்றத் தலைவர் பேசுகையில், கடந்த ஆட்சியில் 10 ஆண்டுகளாக வரி வசூலிக்காமல், தற்போது அதிகாரிகள் கெடுபிடியாக மொத்தமாக வரி வசூல் செய்வது கண்டனத்திற்குரியது. மேலும் இது ஆட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் எனவே நகரமன்ற உறுப்பினர்கள் மூலம் சென்று கால அவகாசம் கொடுத்து வரியை வசூலிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் நகரில் 10 தினங்களில் பன்றி, நாய் மற்றும் மாடுகளைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆக்கிரமிப்பு பகுதிகளில் வீடுகள் இடிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் வீடுகள் கட்டித் தரப்படும். கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் கொண்டு வரப்பட்டு  சிதம்பரம் நகரில் 33 வார்டுகளிலும் புதிதாய் குழாய்கள் அமைத்து தூய்மையான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி குடிநீர் தேக்கம் ரூ.8 கோடி செலவில் சீரமைக்கப்படும். உறுப்பினர்களின் அனைத்து கோரிக்கைகளையும் அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று அதற்கான நிதியைப் பெற்று செய்து கொடுக்கப்படும்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்