விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகிலுள்ள தென்பாசார் ஓடை பகுதியில் போலி மதுபானம் தயாரிக்கப்பட்டதை கண்டுபிடித்துள்ளனர். காவல் துறையைச் சேர்ந்த ஒரு அதிகாரிக்கு போலி மதுபானம் தயாரிப்பு சம்பந்தமாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அவரது உத்தரவின் பேரில் திண்டிவனம் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் கீதா, குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் ஓடை பகுதிக்கு அதிகாலை 4 மணி அளவில் யாருக்கும் தெரியாமல் ரகசியமான முறையில் சென்று திடீர் ரைடு நடத்தினார்கள்.
அப்போது அந்த பகுதியில் போலி மதுபான ஆலை இயங்கி வந்துள்ளதை கண்டுபிடித்துள்ளனர். இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் திண்டிவனம் அருகிலுள்ள கேணிப்பட்டு கிராமத்தை சேர்ந்த ஏழுமலை, ஆனந்தபாபு, நாராயணன், அன்பு, தென்பாசார் கிராமத்தை சேர்ந்த வீரப்பன் என்பது தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் காவல் நிலையம் அழைத்து சென்று தொடர் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் போலி மதுபானங்கள் தயாரிக்க பயன்படுத்திய கச்சா பொருட்கள் காலி பாட்டில்கள் அதற்கான பேரல்கள் அட்டைப் பெட்டிகளில் அடைக்கப்பட்டிருந்த ஆயிரத்தி 500 குவாட்டர் பாட்டில்கள் போலி மருந்து தயாரிக்க பயன்படும் தண்ணீர் கேன்கள் அதற்கான இயந்திரங்கள் மது பாட்டில்களில் ஒட்டுவதற்கு பயன்படுத்தப்படும் ஸ்டிக்கர்கள் சரக்குகளை வெளியூர்களுக்கு கொண்டு செல்லும் மினிவேன் இரண்டு பைக்குகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இவற்றின் மொத்த மதிப்பு 7 லட்சம் என்று போலீசார் தெரிவிக்கின்றனர்.
இதேபோன்று போலி மது தயாரிக்கும் கும்பலை போலீசார் அவ்வப்போது கைது செய்து வழக்கு பதிவு செய்கிறார்கள். நீதிமன்றத்தின் மூலம் சிறைக்கும் அனுப்புகிறார்கள். ஆனால் போலி மது தயாரிப்பு தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்றுதான் வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் கள்ளச்சாராய உற்பத்தி செய்வதும் காவல்துறை அவ்வப்போது சென்று அவர்களை கைது செய்வதும் தொடர் சம்பவங்களாக உள்ளன. மேலும் சில மாதங்களுக்கு முன்பு செஞ்சி அருகே போலி மதுபானம் தயாரித்தவர்களை போலீசார் கைது செய்தனர். அதற்கு சில மாதங்கள் கழித்து மயிலம் அருகே போலி மதுபான தயாரிப்பு கண்டுபிடித்து அதில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். பெரம்பலூர் அருகே இதேபோன்று போலி மதுபானம் தயாரித்து தமிழகத்தையே பரபரப்பாகி பெரிய கும்பலை போலீசார் கைது செய்தனர். இப்படி போலி மதுபான தயாரிப்பு தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. அதில் சம்பந்தப்பட்டவர்களை போலீசார் கைது செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். இதற்கு முற்றுப்புள்ளி தான் போலீசாரால் வைக்க முடியவில்லை என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.