முன்னாள் டிஜிபியும் காவல் ஆணையருமான ரவி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது பேசுகையில், 'என்னுடைய போட்டோவை பயன்படுத்தி என்னுடைய தகவல்களைப் பயன்படுத்தி ஒரு ஃபேக் அக்கவுண்ட் உருவாக்கி இருக்கிறார்கள். ஒரு போலியான முகநூல் கணக்கை உருவாக்கி அதன் மூலமாக என்னுடைய நண்பர்களுக்கு தகவல் கொடுக்கிறார்கள். நண்பர்கள் நானே தகவல் கொடுத்ததாக நினைக்கிறார்கள்.
'நான் ஒரு ஆர்மி அதிகாரியிடம் இருந்து பர்னிச்சர் வாங்கி இருக்கிறேன். ரொம்ப சீப்பான விலையில் கொடுக்கிறார்கள். அதை நீங்களும் வாங்குங்கள். இன்னும் கொஞ்ச நேரத்தில் அவர் உங்களை தொடர்பு கொள்வார்' என சொல்வதாக மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது. அதை நம்பிய நிலையில் அந்த நபரை காண்டாக்ட் பண்ணியவுடன் லெப்டினண்ட் கர்னல் என ஒருவர் பேசியுள்ளார். அவர் இந்தியில் மட்டும் பேசுகிறார். ஆங்கிலத்தில் பேச தெரியவில்லை. இதனால் சந்தேகமடைந்த என்னுடைய நண்பர் எனக்கு நேரடியாக தொடர்பு கொண்ட பொழுது நான் ஆய்வு செய்ததில் அது போலியான கணக்கு என தெரிந்தது. உடனடியாக சைபர் கிரைம் காவல்துறையில் தகவல் தெரிவித்துவிட்டேன்.
எனது சார்பில் மெட்டா நிறுவனத்திற்கும் இதுபோன்று போலியான கணக்கு தொடங்கப்பட்டுள்ளது என தெரிவித்துவிட்டேன். இந்த மாதிரி போலியான கணக்குகளை உருவாக்குவதன் மூலமாக பணம் கையாடல் செய்வதுதான் இந்த குற்றவாளிகளுடைய வேலை. இதில் ஒரு போலிஸ் அதிகாரியான என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் என்றால் என்னுடைய புகைப்படத்தை போடுவதால் மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படும். ஒரு போலீஸ் அதிகாரி படத்தை வைத்து போலி தனக்கு உருவாக்க முடியாது என்ற எண்ணம் மக்கள் மத்தியில் இருக்கும் என்ற கருத்தை பயன்படுத்திக் கொள்கிறார்கள் இந்த சைபர் குற்றவாளிகள்.
மக்கள் என்ன நினைப்பார்கள், நிச்சயமாக ஒரு போலீஸ் ஆபீஸர் படத்தை வைத்து ஃபேக் ஐடி உருவாக்குவதற்கான தைரியம் யாருக்கும் இருக்குமா என நினைப்பார்கள் என்ற எண்ணத்தை பயன்படுத்தி தான் இந்த மாதிரி ஒரு போலி கணக்கை உருவாக்கி உள்ளார்கள். நான் சொல்வது என்னவென்றால் இதுபோன்று முகநூல், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வருகின்ற பணம் சம்பந்தப்பட்ட, பண பரிவர்த்தனை சம்பந்தப்பட்ட எந்த ஒரு தகவல் வந்தாலும் அதை நம்பக் கூடாது. எந்த ஒரு போலீஸ் அதிகாரியோ, எந்த ஒரு நண்பரோ எனக்கு நீங்கள் பணம் கொடுங்கள் என மெசேஜ் கொடுப்பது அல்லது இந்த பர்னிச்சர் வாங்குங்கள் என்று சொல்வது இதையெல்லாம் நம்ப வேண்டாம்'' என்றார்.
அண்மைக்காலமாகவே மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட பல அதிகாரிகளின் பெயரில் ஃபேக் ஐடிகள் உருவாக்கப்பட்டு பணம் பறிக்கும் முயற்சிகள் நடந்தது. அந்தந்த அதிகாரிகளே இதுபோன்ற மோசடிகள் குறித்து இதுபோன்ற தகவலை நம்ப வேண்டாம் என பொதுவெளியில் தெரிவித்தனர். இந்நிலையில் அதன் அடுத்தகட்டமாக மோசடிகளை விசாரிக்கும் காவல்துறை அதிகாரி பெயரிலேயே ஃபேக் ஐ.டி உருவாக்கப்பட்டு மோசடிக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.