கள்ளக்குறிச்சி மாவட்டம் விருகாவூர் கிராமத்தில் மருத்துவம் படிக்காமல் மெடிக்கல் மற்றும் கிளினிக் சென்டர் வைத்து ஒருவர் மருத்துவம் பார்த்து வருவதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் செந்தில்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் சம்பந்தப்பட்ட சரவணா மெடிக்கல் சென்டர் மற்றும் கிளினிக்கில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
அந்தக் கிளினிக்கில் சரவணன் என்பவர் போதிய மருத்துவக் கல்வி பயிலாமல் டிப்ளமோ ஐ.டி.ஐ மட்டும் முடித்துவிட்டு மருத்துவம் பார்த்து வந்தது தெரிய வந்தது. தொடர்ந்து ஆய்வின்போது மூன்று நபர்களுக்கு IV FLUID TRIPS போடப்பட்டிருந்ததும் தெரியவந்தது. மேலும் மருந்தகத்தில் காலாவதியான மருந்துகள் விற்பனை செய்வதும் கண்டறியப்பட்டு காலாவதியான மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது.
மருத்துவம் பயிலாமல் மக்களுக்கு மருத்துவம் பார்ப்பது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடும் என்பதை அறிந்தும் அதனைச் செய்து வந்த போலி மருத்துவர் சரவணன் என்பவரை வரஞ்சரம் காவல்துறையினர் கைது செய்ததுடன் மருந்தகத்திற்கும் வருவாய்த்துறையினர் உதவியுடன் சீல் வைத்தனர்.
மருத்துவ படிப்பு படிக்காமல் மருத்துவம் பார்ப்பதும் கருவில் குழந்தைகளின் பாலினம் கண்டறிவதும் கருக்கலைப்பதும் சட்டப்படி குற்றம் இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்படியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.