டி.டி.வி. அணிக்கு மாற திட்டமிடும் அ.தி.மு.க.புள்ளிகளால் திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஒன்றியம் அ.தி.மு.க. கோஷ்டி பூசல் உச்சகட்டம் அடைந்துள்ளது. அ.தி.மு.க.வின் 47-வது ஆண்டு தொடக்கவிழா பொதுக்கூட்டத்தில் அம்பலமானது.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராக இருப்பவர் பி.கே.டி.நடராஜன் இவர் ஒன்றிய செயலாளர் பதவியுடன் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவராகவும் கடந்த முறை பதவி வகித்தார். ஜனதா கட்சியிலிருந்து விலகி இரு வருடங்களுக்கு முன்பு அ.தி.மு.க.வில் இணைந்த அவர் படிப்படியாக வளர்ச்சி கண்டு சட்டமன்ற உறுப்பினராகவும் ஆனார். இவர் தற்போது கட்சி தொண்டர்களை மதிக்காமல் தனக்கு கீழ் செயல்படும் நால்வர் அணியை வைத்துக்கொண்டு கட்சியை நடத்தி வந்ததால் கடந்த ஐந்து வருடங்களாக ஆத்தூர் ஒன்றிய அ.தி.மு.க.வில் பலத்த கோஷ்டி பூசல் இருந்து வந்தது. ஜெயலலிதா மறைவிற்கு முன்வரை அமைதிகாத்த அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் தற்போது தங்கள் கோபத்தை வெளிக்காட்ட தொடங்கிவிட்டார்கள். ஒன்றிய துணைச் செயலாளர் மணலூர் சின்னச்சாமி, ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆத்தூர் தேவராஜன், ஒன்றிய பொருளாளர் எம்.ஆர்.எஸ்.முனியப்பன், ஒன்றிய பாசறை தலைவர் சேடபட்டி ராஜேந்திரன், மணலூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ரத்தினகுமார் உட்பட பலர் தங்களது எதிர்ப்பை பகிரங்கமாக காட்ட தொடங்கிவிட்டனர்.
அ.தி.மு.க.வின் 47-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் சின்னாளபட்டியில் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள வரும் முன்னாள் அமைச்சர் நத்தம் ஆர்.விசுவநாதனை வரவேற்று விசுவநாதனின் விசுவாசிகளான மேற்கண்ட புள்ளிகள் தங்களது எதிர்ப்பை பிளக்ஸ் போர்டிலும், தினசரி நாளிதழ் விளம்பரத்திலும் காட்ட தொடங்கினார்கள். இதில் அனைத்து விளம்பரங்களிலும் ஒன்றிய செயலாளரான பி.கே.டி.நடராஜன் படம் இல்லாமல் வெளிவந்துள்ளது அ.தி.மு.க.வினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதுகுறித்து மணலூர் சின்னச்சாமியின் ஆதரவாளர்கள் கூறுகையில், பி.கே.டி. நடராஜன் ஒன்றிய செயலாளராக இருந்து கொண்டு கட்சி நிர்வாகிகளை மதிப்பதில்லை. ஆத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் குடியிருக்காமல் திண்டுக்கல்லைத் தாண்டி சௌந்திரராஜா ஏர்போர்ட் நகரில் குடியிருப்பதால் மலையில் உள்ள தொண்டர்கள் இவரை சந்திக்க முடியாமல் திரும்பி விடுகின்றனர். தொண்டர்களோ, கட்சி நிர்வாகிகளோ செல்போனில் தொடர்பு கொண்டால் எடுப்பதில்லை என்று குற்றம் சாட்டினார்கள்.
பி.கே.டி. நடராஜன் ஆதரவாளர்கள் இதுகுறித்து கூறும்போது... மணலூர் சின்னச்சாமி கோஷ்டி எப்போதுமே கட்சியை பிளவுபடுத்தும் நோக்கில்தான் செயல்படும். கடந்த முறை அ.தி.மு.க. ஆட்சியின் போது நத்தம் விசுவநாதன் ஆதரவாளர்கள் என்று காட்டிக்கொண்டு மணலூர் சின்னச்சாமி, அவருடைய மகன் ரத்தினகுமார், மற்றொரு மகன் தமிழ், மனைவி, மருமகள் என அனைவருக்கும் கட்சி பதவிகளை பகிர்ந்து கொடுத்துவிட்டு தொண்டர்களை ஏமாற்றிவிட்டார். இதனால் இவரோ, இவருடைய மகனோ மணலூர் ஊராட்சியில் போட்டியிட்டால் டெபாசிட் கூட வாங்க முடியாது என்றனர்.
ஒன்றிய செயலாளர் படத்தை போடாமல் நத்தம் விசுவநாதனின் மருமகனான ஆர்.வி.என்.கண்ணனின் படத்தை போட்டு பிளக்ஸ் வைத்திருப்பதால் அ.தி.மு.க. தொண்டர்கள் இவர் பின்னால் செல்லமாட்டார்கள் என்றனர். ஏற்கனவே டி.டி.வி. தினகரன் கோஷ்டி வளைத்து வளைத்து தங்கள் கட்சிக்கு ஆட்களை சேர்த்து வரும் இந்த நேரத்தில் ஆத்தூர் ஒன்றிய அ.தி.மு.க.கோஷ்டி பூசல் அவர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. மொத்தத்தில் அ.தி.முக. ஆத்தூர் ஒன்றியத்தில் அம்போவாவது உறுதியாகிவிட்டது. ஆறுதலான விசயம் என்னவென்றால் சின்னாளபட்டி நகர செயலாளர் கணேஷ்பிரபு வைத்த பிளக்ஸ் போர்டில் மட்டும் அதிசயமாய் பி.கே.டி.நடராஜன் படம் இருந்தது!