திண்டுக்கல்லில் 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் விசாகன் தலைமைத் தாங்கினார். விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன், பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி மற்றும் கூட்டுறவுத் துறை அதிகாரிகள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில், 5,360 பயனாளிகளுக்கு ரூ. 33.25 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும், கூட்டுறவு பணியாளர்கள், மாணவ மாணவிகளுக்கு நினைவுப் பரிசு சான்றிதழ்களையும் அமைச்சர் ஐ.பெரியசாமி, அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் வழங்கினார்கள்.
இதில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, “இந்தியாவில் கூட்டுறவு சங்கங்கள் சிறப்பாக செயல்படும் மாநிலங்களில் தமிழகம் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது. அதுபோல் தமிழகத்தில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகளைப் பார்வையிட்ட ஒன்றிய அமைச்சர்கள் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பொதுமக்களுக்கு சிறப்பான முறையில் ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது என்று சான்றிதழை வழங்கி உள்ளனர்.
தமிழக முதல்வராக தலைவர் ஸ்டாலின் வந்த பின்பு சுய உதவிக் குழு கடன்கள், நகைக் கடன்கள் ஆகியவை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. மேலும், ரூ.10,292 கோடி மதிப்பிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் சுய உதவிக் குழு கடன்கள், நகைக் கடன்கள், விவசாயக் கடன்கள் என ரூ. 900 கோடி வரையிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இப்படி, ஒரு மாவட்டத்தில் மட்டும் ரூ. 900 கோடி என்றால் தமிழகம் முழுவதும் முதல்வர் எவ்வளவு கடன்கள் தள்ளுபடி செய்திருப்பார் என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.
மகளிர் குழுக்களுக்கான கடனுதவி ரூ. 12 லட்சத்திலிருந்து ரூ. 20 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. கூட்டுறவுத் துறை சார்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே மகாராஷ்டிராவுக்கு அடுத்து தமிழகத்தில் தான் கூட்டுறவுத் துறை மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மன்னவனூரில் ஆராய்ச்சி மையம் தொடங்க இருக்கிறது” என்று கூறினார்.