வெளியூர் பயணம் செல்லும் பயணிகளுக்கு இயற்கை உபாதைகள் ஏற்படுவது சகஜம் அதிலும் பெண்களுக்கு இதுபோன்ற வேலைகளில் சில சிரமங்கள் உள்ளது. பரபரப்பான சேலம் எம்.ஜி.ஆர் மத்திய பேருந்து நிலையத்தில் ஏப்ரல் 29 ஆம் தேதி இரவு கோவை பேருந்துகள் நிற்கும் இடத்தில் இருந்த கட்டண கழிவறை அருகே காத்துக்கொண்டிருந்தார்கள் வெளியூர் செல்ல வந்திருந்த பெண்கள். அதில் ஒரு பெண்ணின் இயற்கை உபாதைக்காக கட்டண கழிவறையை பயன்படுத்த வந்தபோது அங்கிருந்த ஊழியர்கள் இருவர், கட்டண கழிவறை செல்ல பத்து ரூபாய் தரவேண்டும் என்று அந்த பெண்ணிடம் கூறினார்கள். அதற்கு அந்த பெண் 'அநியாயமாக இருக்கே சிறுநீர் கழிக்க மூன்று ரூபாய் அல்லது ஐந்து ரூபாய் தான் வசூல் செய்வார்கள். சில இடங்களில் இலவச கட்டண கழிவறைகள் தானே' என்று கேட்டார். அதற்கு அந்த ஊழியர்கள் "யம்மா பொண்ணுங்களுக்கு அரசாங்கம் இலவசமாக ஓசில போறதுக்கு பஸ் கொடுத்தது பத்தாதா ஒன்னுக்கு போக (சிறுநீர் கழிக்க)....'' என அநாகரீகமாக பேசினார்.
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் மத்திய பேருந்து நிலையத்திற்கு நாள் ஒன்றுக்கு சுமார் 1,50,000 பேர் பயணிகள் பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். இந்தநிலையில் அங்கு வருவோருக்கு ஏற்படும் இயற்கை உபாதைகளை கழிக்க இலவச சிறுநீர் கழிப்பிடம் உள்ளது. ஆனால் அது மாநகராட்சியின் சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தால் மிகவும் மோசமான நிலையில் அந்த வழியாக செல்லும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மூக்கை பொத்தி செல்லும் அளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
இது ஒரு புறம் இருக்க, சேலம் மத்திய பேருந்து நிலையத்தில் இயங்கும் கட்டண கழிப்பிடமோ அங்கு இயற்கை உபாதை கழிக்க வரும் பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் சிறுநீர் மற்றும் மலம் கழிக்க அரசு நிர்ணயம் செய்த தொகையைவிட ஒரு நபர் ஒருவருக்கு பத்து ரூபாய் வசூல் செய்வதால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர், பெரும்பான்மையான பேருந்து நிலையத்தில் இலவச கழிவறைகளே செயல்பட்டு வரும் நிலையில் இதுபோன்று மெகா வசூல் செய்வதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். அதிலும் குறிப்பாக பெண்கள் வேறு வழியில்லாமல் அவதிக்குள்ளாகின்றனர். அதே போல கட்டண கழிவறையில் வாங்கும் பணத்திற்கு பில் தருவதில்லை. இதுவே முதல் சட்ட விதிமீறல், மேலும் முறையாக பராமரிப்பும் செய்வதில்லை.இதனை மாநகராட்சி அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை என்பது பயணிகளின் குற்றச்சாட்டு.