Skip to main content

அரசு வேலை ஆசை காட்டி பல லட்சம் ரூபாய் சுருட்டல்; கணவன் மனைவிக்கு வலைவீச்சு!

Published on 22/04/2023 | Edited on 22/04/2023

 

Extortion of lakhs of rupees by pretending to want a government job; Husband and wife attack!

 

சேலத்தில், அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பல லட்சம் ரூபாய் சுருட்டி மோசடி செய்த கணவன், மனைவியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

 

சேலம் மாவட்டம், பெத்தாம்பட்டியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருடைய மகன் சதீஷ். இவர், சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில் கூறியுள்ளதாவது: கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் என்னுடைய உறவினரான முருங்கப்பட்டியைச் சேர்ந்த அமுதவல்லி, அவருடைய கணவர் கணேசன் ஆகியோர் வருவாய்த்துறையில் அரசாங்க வேலை வாங்கித் தருவதாகக் கூறினர். அதற்காக அவர்கள் கேட்டதன் பேரில், 5 லட்சம் ரூபாய் கொடுத்தேன்.

 

என்னைப் போல், அய்யந்துரை, வனிதா, பிரபாகரன், பிரேமலதா, தமிழரசன், சரண்யா ஆகியோரும் லட்சக்கணக்கில் அவர்களிடம் அரசு வேலைக்காக பணம் கொடுத்தனர். இதையடுத்து, அமுதவல்லியும், கணேசனும் நாமக்கல் மாவட்ட வருவாய்த்துறையில் எனக்கு பணி ஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளதாகக் கூறி என்னிடம் பணி நியமன ஆணை வழங்கினர். மற்றவர்களுக்கும் அதேபோல் வெவ்வேறு இடங்களில் பணி ஒதுக்கீடு வழங்கப்பட்டதாகக் கூறி, பணி நியமன ஆணைகளை வழங்கினர்.

 

பணி நியமன ஆணையுடன், உரிய அலுவலகங்களில் பணியில் சேர சென்றபோதுதான் அவர்கள் கொடுத்தவை அனைத்தும் போலி பணி நியமன ஆணைகள் என்பது எங்களுக்குத் தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நாங்கள், அவர்களிடம் பணத்தைத் திருப்பிக் கேட்டோம். அவர்கள் தர மறுத்ததோடு, கொலை மிரட்டல் விடுத்தனர். அதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, எங்கள் பணத்தை மீட்டுத் தர வேண்டும்.

 

இந்தப் புகார் குறித்து மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளர் புஷ்பராணி விசாரணை நடத்தினார். முதல்கட்ட விசாரணையில், புகாரில் முகாந்திரம் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அமுதவல்லி, கணேசன் ஆகியோர் மீது மோசடி, கூட்டுச்சதி உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாக உள்ள கணவன், மனைவியை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்