சேலத்தைச் சேர்ந்த தொழில் அதிபர்களிடம், சக்தி வாய்ந்த இரிடியம் உலோகம் இருப்பதாகக்கூறி 55 லட்சம் ரூபாய் சுருட்டிய நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சேலம் பொன்னம்மாபேட்டையைச் சேர்ந்தவர் ஸ்டாலின் மற்றும் பிரவீன். தொழில் அதிபர்கள். இவர்களை கடந்த சில வாரங்களுக்கு முன், சென்னையைச் சேர்ந்த ஒரு கும்பல் அணுகியது.
அந்த கும்பல், தங்களிடம் அரிதான 250 கோடி ரூபாய் மதிப்புள்ள இரிடியம் உலோகம் இருப்பதாகவும், அதை வாங்கி வீட்டில் வைத்தால் செல்வம் கொழிக்கும் என்றும் கூறியுள்ளனர். அதை 55 லட்சம் ரூபாய்க்கு விற்பனைக்குக் கொடுப்பதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதை நம்பிய தொழிலதிபர்கள் இருவரும், அவர்களிடம் 55 லட்சம் ரூபாயைக் கொடுத்துள்ளனர்.
பதிலுக்கு அவர்களும் கண்ணாடி பெட்டி ஒன்றை காண்பித்து, அதற்குள் இரிடியம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் அந்த கும்பல், வெட்டவெளியில் வைத்து அந்த பெட்டியைத் திறக்க முடியாது என்றும், அதைத் திறப்பதற்கு முன், அதற்கென பிரத்யேக பாதுகாப்பு கவச உடைகளை அணிந்து கொள்ள வேண்டும் என்றும், வெளிநாட்டில் இருந்து அந்த உடைகளை வரவழைக்க மேலும் சில லட்ச ரூபாய் செலவாகும் என்றும் கூறியுள்ளனர்.
இதனால் சந்தேகம் அடைந்த ஸ்டாலினும், பிரவீனும் இரிடியம் கும்பல் மீது சேலம் மாநகர காவல்துறை ஆணையர் சங்கரிடம் புகார் அளித்தனர்.
இந்நிலையில், ஜூன் 24ம் தேதி மாலை, காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்குப் பின்னால் கருப்பு நிறத்தில் ஒரு மர்மப் பெட்டி கிடப்பது தெரிய வந்தது. வெடிகுண்டு தடுப்புப்பிரிவினர் உதவியுடன் அந்தப் பெட்டியைத் திறந்து பார்த்தபோது, அதற்குள் சென்னை கும்பல் தெரிவித்த இரிடியம் உலோகம் கொண்ட கண்ணாடி பெட்டி இருப்பது தெரிய வந்தது.
அந்த பெட்டியை உடைக்க முயற்சித்தபோது அதற்குள் இருந்து அமிலங்களின் நெடி பரவியது. இதையடுத்து முழுவதுமாக அந்த பெட்டியை தொடர் ஆய்வுக்காக காவல்துறையினர் எடுத்துச் சென்றனர்.
இந்த விவகாரத்தில் சேலம், சென்னை, ஆந்திரா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 6 பேர் கும்பல் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்தது.
இந்த வழக்கு தொடர்பாக ஆந்திரா மாநிலம் ராஜமுந்திரியைச் சேர்ந்த அங்கம் தாதாஜி (39), சேலம் அம்மாபேட்டையைச் சேர்ந்த சரவணன் (45), சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த தினேஷ்குமார் (25), சென்னை சிவக்குமார் (42) ஆகிய நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். சேலத்தைச் சேர்ந்த ஒருவர் உள்பட இருவரை தேடி வருகின்றனர்.
இந்த கும்பல், தமிழகத்தில் வேறு சில இடங்களிலும் இதேபோல் இரிடியம் மோசடியில் ஈடுபட்டு கோடிக்கணக்கில் சுருட்டியிருப்பது தெரிய வந்துள்ளது. சேலத்திலேயே மேலும் 6 தொழில் அதிபர்கள் இந்த கும்பலிடம் லட்சக்கணக்கில் பறிகொடுத்துள்ளனர்.
இந்த சம்பவத்தின் பின்னணியில் மேலும் யார் யாருக்கு தொடர்பு இருக்கிறது என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.