கடந்த 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக பல பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோரும் நேரில் ஆஜராக தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை விசாரிக்கும் அருணா ஜெகதீசன் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. சீமான் கடந்த மாதம் ஆஜரான நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் நேரில் ஆஜராவர் என எதிர்பாக்கப்பட்டது. இந்நிலையில் அவர் நேரில் ஆஜராகாமல் நடிகர் ரஜினிகாந்தின் வழக்கறிஞர்கள் தற்போது ஆணையத்தில் ஆஜராகியுள்ளனர்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் இறுதியில் காயமடைந்த மக்களை நேரில் பார்க்க சென்ற ரஜினிகாந்த் தூத்துக்குடி விமானநிலைத்தில் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதாக பேசியிருந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் அவரிடம் இதுதொடர்பாக நேரில் விசாரணை ஆணையம் விசாரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அவரது வழக்கறிஞர் இளம்பாரதி உட்பட 3 வழக்கறிஞர்கள் ஆணையத்தில் ஆஜராகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆணையத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு வேண்டும் என்ற ரஜினியின் கோரிக்கையை விசாரணை ஆணையம் ஏற்றுகொண்டது. அதேபோல் ரஜினியிடம் கேட்கவேண்டிய கேள்விகள் சீலிடப்பட்ட கவரில் அவரது வழக்கறிஞர்களிடம் கொடுக்கப்பட்டது.