
திமுக ஆட்சி அமைத்து முதல் சட்டமன்ற கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று நடந்த சட்டமன்ற கூட்டத்தில், அண்மையில் மறைந்த பிரபல எழுத்தாளர் கி. ராஜநாராயணன், துளசி அய்யா வாண்டையார், நடிகர் விவேக், முன்னாள் துணைவேந்தர் அனந்த கிருஷ்ணன், இந்திய நிர்ணய சபை உறுப்பினர் காளியண்ணன் ஆகியோருக்கு தமிழ்நாடு சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சபை உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். இந்த இரங்கல் தீர்மானத்தில் பெரியாரின் பெருந்தொண்டர் அய்யா ஆனைமுத்து அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்காதது பெரியாரைப் பின்தொடர்வோர் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில், இதற்கு வருத்தம் தெரிவித்தும் பெரியாரியல் பேரறிஞர் வே. ஆனைமுத்துவின் மறைவுக்கு தமிழ்நாட்டுச் சட்டமன்றத்தில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி தலைமைக்குழு சார்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில், "பெரியாரியல் பேரறிஞர், பெரியாரின் கொள்கைகளை இந்திய ஒன்றியம் முழுவதும் பரப்பியவர். மண்டல் குழு அமைய வித்திட்டவர். அதன் நிறைவேற்றத்துக்குப் பாடாற்றியவர். தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டுக்கு அடித்தளமிட்டவர். விகிதாசார இடஒதுக்கீடு கோரி வாழ்நாள் முழுக்க வகுப்புரிமைப் போரில் களம் கண்டவர். தேசிய இனங்களின் தன்னுரிமைக்காக இந்திய ஒன்றியத்தின் எல்லா மொழித்தேசங்களுக்கும் பயணித்தவர். திராவிடர் இயக்க முன்னோடி - சீரிய சிந்தனையாளர், சிந்தனையாளன் இதழாசிரியர்.
பெரியார் ஈ.வெ.ரா – நாகம்மை கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளை நிறுவுநர். அனைத்திந்தியப் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர் மற்றும் மதச்சிறுபான்மையினர் பேரவையின் புரவலர் - தலைவர். மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச்செயலாளர். 97 ஆண்டு வாழ்க்கையில் 76 ஆண்டுகள் தந்தை பெரியாரின் சுயமரியாதைக் கொள்கையைச் சுமந்தவர்.
3 தொகுதிகளாக - 2200 பக்கங்களில் 1.7.1974-லும், 20 நூல்களாக - 9300 பக்கங்களில் 21.3.2010-இலும் தந்தை பெரியாரின் பேச்சுகளையும் எழுத்துகளையும் தொகுத்து “பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள்” என்ற பெயரில் அன்றைய முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களை வெளியிட வைத்து திராவிடர் இயகத்திற்கான கருத்துப் போர்க்கருவியை வழங்கிய சிந்தனையாளர்.
தோழர் வே. ஆனைமுத்து அவர்கள் 6.4.2021இல் மறைந்தபோது, தி.மு.க தலைவர் – இன்றைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், “தந்தை பெரியார் கொள்கையை நெஞ்சில் ஏந்தி, பகுத்தறிவு - சமூகநீதிப் பாதையில் பயணித்து, முதுமையிலும் பொதுத் தொண்டாற்றிய மார்க்சிய - பெரியாரிய பொதுவுடைமை இயக்கத்தின் நிறுவனர் வே.ஆனைமுத்து அவர்களின் மறைவு திராவிடர் இயக்கத்திற்கும் தமிழ்ச் சமுதாயத்திற்கும் பேரிழப்பாகும். பெரியாரின் சிந்தனைகளைத் தொகுத்த அய்யாவின் பெரும்பணியும், சிந்தனையாளன் என்ற சீரிய இதழ் வாயிலாக அவர் வழங்கிய கருத்துகளும் என்றும் நிலைத்திருக்கும். பெரியார் பெருந்தொண்டர் அய்யா ஆனைமுத்து அவர்களின் மறைவுக்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று இரங்கல் அறிக்கை வெளியிட்டு, அன்று மாலையே நேரிலும் வருகைதந்து அஞ்சலி செலுத்தியதற்கு மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அதேநேரத்தில், 22.6.2021 செவ்வாய்க் கிழமை இன்று கூடிய தமிழ்நாட்டுச் சட்டமன்றத்தில் எழுத்தாளர்கள், கலைஞர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைவர்கள் ஆகியோரின் மறைவுக்காக நிறைவேற்றப்பட்டுள்ள இரங்கல் தீர்மானத்தில் திராவிடர் இயக்க முன்னோடி தோழர் வே. ஆனைமுத்துவின் பெயர் இடம்பெறாதது ஒட்டுமொத்த திராவிடர் இயக்கங்களையும் – பெரியார் கொள்கையையும் அவமதிப்பதாகவே கருதுகிறோம்.
இது தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் பார்வைக்கு வராது கவனக்குறைவால் நிகழ்ந்த பிழையாக இருக்கும் என்றே நம்புகிறோம்.
எனவே, தமிழ்நாட்டு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின், இதில் உடனடியாகத் தலையிட்டு நாளைய (23.6.2021) சட்டமன்றக் கூட்டத்திலோ, அல்லது 24.6.2021 அன்றைய முதலமைச்சர் உரையிலோ தனியாக ஒரு இரங்கல் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றுவதோடு, வே. ஆனைமுத்துக்கு நினைவரங்கம் அமைக்கவும் அறிவிப்பதே திராவிடர் இயக்கத்திற்கு இன்றைய தமிழ்நாட்டு அரசும் – திராவிட முன்னேற்றக் கழகமும் காட்டும் நன்றியறிதலாக இருக்க முடியும்; அதுவே கவனக்குறைவால் நிகழ்ந்த இப்பிழையின் பழிச்சொல் வராமல் தமிழ்நாட்டு முதலமைச்சர் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைக் காக்கும் என்று தமிழ்நாட்டு முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.