ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது துரதிர்ஷ்டவசமானது என வேதாந்தா குழுமம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, நேற்று மாலை தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு நடவடிக்கை எடுத்து அரசாணை வெளியிட்டது. தமிழக அரசு அரசாணை வெளியிட்டதை அடுத்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி முன்னிலையில், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது. இதன் பின்னர் வாயில் கதவில் தமிழக அரசின் அரசாணை ஒட்டப்பட்டது.
இந்நிலையில் தமிழக அரசின் நடவடிக்கை குறித்து விளக்கம் அளித்துள்ள வேதாந்தா குழுமம்,
கடந்த 22 ஆண்டுகளாக வெளிப்படைத் தன்மையுடனும், நிலையான வழிகளுடனும் தூத்துக்குடிக்கும், தமிழகத்தின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கும் ஸ்டெர்லைட் ஆலை இயங்கி வந்தது. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது துரதிர்ஷ்டவசமானது. தமிழக அரசின் அரசாணை குறித்து ஆய்வு செய்து எதிர்க்காலம் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.
அதேபோல், மும்பை பங்குசந்தை மற்றும் தேசிய பங்குசந்தைக்கு கடிதம் எழுதிய வேதாந்தா குழுமம்,
ஆலையை மூட பிறப்பிக்கப்பட்ட உத்தரவு குறித்து தெரிவித்துள்ளது. இது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தகவல் தெரிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.