Skip to main content

அடக்கம் செய்யப்பட்டவர் மீண்டும் வந்ததால் பரபரப்பு!

Published on 05/04/2022 | Edited on 05/04/2022

 

Excitement as the buried man came back!

 

ஈரோடு மாவட்டம் கோபியில், உயிரிழந்ததாக அடக்கம் செய்யப்பட்ட நபர் மீண்டும் உயிருடன் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்துள்ள புஞ்சை துறையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கரும்பு வெட்டும் தொழிலாளியான மூர்த்தி. இவர் கர்நாடகா உள்ளிட்ட சில அண்டை மாநிலங்களுக்கு சென்று அங்கு தங்கியிருந்து கரும்பு வெட்டும் கூலித் தொழில் செய்துவந்தார். சில மாதங்களுக்கு முன் வேலைக்குச் செல்வதாக வீட்டை விட்டு சென்ற மூர்த்தி வீடு திரும்பவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் மூர்த்தியை பல இடங்களில் தேடி வந்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த 30 ஆம் தேதி சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகே கிடப்பதாக மூர்த்தியின் மகன்கள் கார்த்தி, பிரபுக்குமார் ஆகியோருக்கு தகவல் கிடைத்தது.

 

இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற கார்த்தி, முகம் அழுகிய நிலையிலிருந்த சடலம் தங்களது தந்தையின் தோற்றத்திலிருந்ததால் போலீசாரிடம் அது எங்கள் தந்தையின் உடல்தான் என்று கூறி சடலத்தை வீட்டிற்கு கொண்டு சென்று இறுதி மரியாதை செய்து அடக்கம் செய்தனர். இந்நிலையில் அடக்கம் செய்யப்பட்டதாக நம்பப்பட்ட மூர்த்தி இன்று காலை சுமார் 7 மணிக்கு வீட்டுக்கு வந்ததால் அவரது குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் அதிர்ந்தனர். பின்னர் மூர்த்தியிடம் அவரது குடும்பத்தினர் விசாரித்ததில் அவர் உயிரிழக்கவில்லை மாறாக வேறொருவர் உடலை மூர்த்தியின் உடல் என்று அடக்கம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதனால் மூர்த்தியின் குடும்பத்தினர் மகிழ்ந்தனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த பங்களா புதூர் போலீசார் இது தொடர்பாக மூர்த்தி மற்றும் அவரது மகன்களிடம் விசாரணையில் ஈடுபட்டனர். அடக்கம் செய்யப்பட்டவர் மீண்டும் வந்ததாக வெளியான தகவல் அங்கு சற்று பதற்றத்தை ஏற்படுத்தியது.

 

 

சார்ந்த செய்திகள்