கேரளாவில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக, முல்லைப் பெரியாறு அணையிலிருந்து உடனடியாக தண்ணீர் திறந்துவிட கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தமிழ்நாடு முதலமைச்சருக்கு சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து, கேரள முதலமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதில் கடிதம் எழுதியிருந்தார். அதில், முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழ்நாடு - கேரளா மக்களின் நலன் பாதுகாக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணையிலிருந்து கேரளாவிற்கு இரண்டு மதகுகள் வழியாக உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் 13 மதகுகளில் -வது மற்றும் 4வது மதகுகள் வழியாக விநாடிக்கு 534 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. முல்லைப் பெரியாறு அணையிலிருந்து வெளியேறும் உபரி நீர், வல்லக்கடவு வழியாக இடுக்கி அணைக்குச் செல்லும். தற்போது அணையின் நீர்மட்டம் 138.70 அடியாக உள்ள நிலையில், அணையிலிருந்து கேரளாவிற்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
உபரிநீர் திறப்பு விழாவில் கேரள மாநில அமைச்சர்கள் ரோஸி அகஸ்டின், ராஜன், இடுக்கி மாவட்ட ஆட்சியர் சீபா ஜார்ஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தற்போதைக்கு அணையில் 139.50 அடி வரையே நீரை தேக்க கேரள அரசு கோரியிருந்த நிலையில், தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 142 அடி வரை தண்ணீர் தேக்க தமிழ்நாட்டுக்கு உரிமை உள்ள நிலையில் உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
152 அடி கொண்ட முல்லைப் பெரியாறு அணையில் 2014, 2015, 2018ஆம் ஆண்டுகளில் 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டது.