நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி 37 இடங்களை கைப்பற்றியது. அதில் திமுக கட்சி 23 தொகுதிகளை கைப்பற்றியது. அதே போல் நாடு முழுவதும் பாஜக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இரண்டாவது முறையாக பிரதமராக நரேந்திரமோடி பதவியேற்றார். இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜூன் 17- ஆம் தேதி தொடங்கியது. இதில் உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்வுகள், சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது. 17- வது மக்களவையின் சபாநாயகராக பாஜகவை சேர்ந்த மக்களவை உறுப்பினர் ஓம்.பிர்லாவை காங்கிரஸ், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் போட்டியின்றி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து துணை சபாநாயகர் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இது வரை நடைபெறவில்லை. மக்கவையில் இரண்டாவது பெரிய கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சி துணை சபாநாயகர் பதவி வேண்டாம் என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவுடன் சுமுகமாக உள்ள ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு மக்களவை துணை சபாநாயகர் பொறுப்பு வழங்க பாஜக தயாராக இருந்ததாகவும், ஆனால் முதல்வர் ஜெகன் ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து தான் வேண்டும் என அழுத்தமாக பாஜக தலைவர்களிடம் கூறியதாக டெல்லி அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் தான் பாஜக கட்சி மக்களவை துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்க காலத்தாமதம் செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 22 உறுப்பினர்கள் உள்ளன. இந்நிலையில் மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியாக உள்ள திமுகவுக்கு 23 மக்களவை உறுப்பினர்கள் இருப்பதால், மக்களவையின் துணை சபாநாயகர் பதவியை பாஜக கட்சி திமுகவிற்கு வழங்க அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும் மக்களவை துணை சபாநாயகர் தொடர்பான அறிவிப்பை பாஜக விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.