உள்ளாட்சித் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படலாம் என்று பல கட்டத் தகவல்கள் வெளியேறுகின்றன. அதற்கேற்ப நடக்கும் தேர்தல் பணிகள் கூட அதனை உறுதிப்படுத்துகின்றன.
ஆனால் உள்ளாட்சித் தேர்தலுக்குள் மாவட்டத்தின் தொகுதியிலுள்ள அதிகப்படியான வாக்காளர்கள் நீக்கப்பட வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்தியுள்ளன. காரணம் மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளுக்குமான வாக்காளர்கள் பட்டியல்கள் மாவட்ட நிர்வாகத்தால் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் அதற்கும் உள்ளூர் நிர்வாகத்துறை வசமிருக்குத் வாக்காளர்கள் பட்டியலிலோ அதிகம் உள்ளன. அதனை சரிசெய்து அதிகப்படியான வாக்காளர்களை நீக்கவேண்டும். தவறினால் உள்ளாட்சித் தேர்தலில் கள்ள ஓட்டு முறை புகுந்து விடும் என்கிறார்கள்.
உதராணமாக நடந்து முடிந்த நாங்குநேரி இடைத்தேர்தலில் அறிவிக்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 2,51,886. ஆனால் தொகுதியின் உள்ளாட்சி நிர்வாகம் வெளியிட்ட ஜாதிவாரி வாக்காளர்களின் எண்ணிக்கையோ 2,56,414. ஓப்பீட்டளவில் பார்த்தால் 4528 வாக்காளர்கள் அதிகம் உள்ளது என்பது தெரியவருகிறது. தொகுதியில் ஓரே வாக்குச் சாவடியில் பலரது பெயர்கள் இரட்டைப் பதிவாகியுள்ளன. பலர் பல ஆண்டுகளுக்கு முன்பே திருமணமாகி வெளியூரிலிருக்கும் கணவரது வீட்டிற்குச் சென்று விட்டனர். அதே சமயம் அப்பெண்களுக்கு கணவர் வீட்டு முகவரியிலும் வாக்குரிமை உள்ளன. இங்கே வாடகைக்குக் குடியிருந்தவர்கள் வேறு இடம் குடிபெயர்ந்து போயுள்ளனர். பலர் இறந்து ஆண்டுகள் பல ஆகியும் அவர்களின் பெயர்கள் இறப்பு பட்டியல்படி நீக்கப்படாமல் இன்னும் வாக்காளர் பட்டியலில் நீடிக்கின்றன என கூறப்படுகிறது.
எனவே இந்த வழிமுறைகளின்படி நூற்றுக்கணக்கானவர்களின் பெயர்கள் நீக்கப்படாமல் பட்டியலில் நீடிக்கின்றன. தோராயமாக, நாங்குநேரிப் பேரூராட்சிக்குட்பட்ட 15 வது வார்டின் திருஞானசம்பந்தர் துவக்கப்பள்ளி வாக்குச் சாவடியில் ஆண்கள் 612 பெண்கள் 678 என மொத்தம் 1290 வாக்குகள் உள்ளன. ஆனால் பட்டியலின் வரிசை எண் 1 முதல் 1293 வரை உள்ளதாகப் பதிவிடப்பட்டுள்ளது. இந்த ஓரு வார்ட்டில் மட்டும் பட்டியலில் சுமார் 50க்கும் மேற்பட்ட நீக்கப்பட வேண்டியவர்களின் வாக்காளர்கள் பதிவுகள் உள்ளன. தொகுதி முழுமைக்கும் கணக்கிட்டால் அதிகப்படியான வாக்காளர்களின் எண்ணிக்கை கூடும். என்று தெரியவருகிறது. ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ஒவ்வொரு வார்டிலும் சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடி அலுவலர்கள் வீடுதோறும் சென்று சரிபார்க்கும் முறை செயல்படுத்தாமலிருக்கின்றன. இது போன்ற புகார்கள், அதிகப்படியான வாக்காளர்கள் சரிபார்க்கப்பட்டு திருத்தப்பட்ட பட்டியல் வெளியிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.