புதுக்கோட்டை மாவட்டம், பொற்பனைக்கோட்டை கிராமத்தில் சுமார் 1.62 கி.மீ. சுற்றளவில் 30 அடி உயரத்தில் அகழியுடன் கோடியாய் சங்க கால சுடுமண் செங்கல் கட்டுமானத்துடன் உள்ள கோட்டையின் உள் பகுதியில் கடந்த ஜூலை 30- ஆம் தேதி முதல் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பேராசிரியர் இனியனை இயக்குநராகக் கொண்டு அகழாய்வுப் பணிகள் நடந்து வருகிறது.
முதல்கட்டமாக வேப்பங்குடி விவசாயி கருப்பையாவின் நிலத்தில் அகழாய்வு பணிகள் தொடங்கி சுமார் 1.5 அடி ஆழத்திற்கு தோண்டப்பட்டுள்ள நிலையில் இதுவரை பலவகையான பானை ஓடுகள் மற்றும் பாசி, மணிகள் கண்டெடுக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நடந்த அகழாய்வில் பழங்காலத்தில் பயன்படுத்திய மண் கின்னங்கள், கின்னங்களின் மேல் மூடி குமிழ், பெண்கள் விளையாடிய வட்ட சில் போன்ற பல சுடுமண் பொருட்கள் கிடைத்துள்ளது.
மேலும், இன்னும் சில அடிகள் அகழாய்வு செய்யும் போது பழைய கட்டிடத்தின் கட்டுமானம் கிடைக்கலாம் என்று எதிர்பார்ப்புகளுடன் அகழாய்வுப் பணிகள் தொடர்கிறது. மற்றொரு பக்கம் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகம் மேற்பரப்பாய்வு செய்து கொண்டிருக்கிறது. ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் கேட்டை சுவரில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றி வருகின்றனர். அகழாய்வுப் பணிகளைப் பார்க்க தினசரி நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.