திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் பகுதியைச் சேர்ந்தவர் மதுரை விநாயகம். இவர் கடந்த 20 வருடங்களாக இந்திய ராணுவத்தில் ஜாயின் கமிஷன் அதிகாரியாக பணிபுரிந்து வந்துள்ளார். அதன் பின்னர், கடந்த 2016 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றுள்ளார். எல்லையில் பாதுகாப்பு பணியில் முழு நேரமும் ஈடுபட்டு வந்த இவர், சொந்த ஊருக்கு வந்ததும் குடும்பத்தினரோடு அமைதியாக வசித்து வந்துள்ளார். மேலும், நடப்பு அரசியலை கூர்மையாக கவனித்து வந்துள்ளார்.
இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வருகின்ற ஏப்ரல் 19 ஆம் தேதி துவங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் வருகிற ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதனையொட்டி, வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்தல் ஆணையத்திடம் இருந்து இந்த அறிவிப்பு வெளியானதும், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய சிறப்புப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, கோவை மாவட்டத்திற்கு தேர்தல் அதிகாரியாக அந்த மாவட்டத்தின் ஆட்சியர் கிராந்தி குமார் பாடி நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, கோவை மாவட்டத்தில் தேர்தலில் களம் காண்பவர்கள் அவரிடம் வந்து வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், திடீரென எந்தவித திட்டமிடலும் இல்லாமல் ஓய்வு பெற்ற ராணுவ வீரரான மதுரை விநாயகம், ராணுவ சீருடையை அணிந்துகொண்டு, தனது குடும்பத்தாரோடு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கு சென்றவர், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட போவதாகக் கூறியுள்ளார். இதற்கான வேட்பு மனுவை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பொள்ளாச்சி நாடாளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலரான சர்மிளாவிடம் கொடுத்துள்ளார்.
முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் சீருடையோடு வேட்பு மனு கொடுக்க வந்ததால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மதுரை விநாயகம் செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது, தான் கடந்த 20 ஆண்டுகளாக இந்திய நாட்டு எல்லையை பாதுகாத்து வந்ததாகவும், தற்போது ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற நிலையில் மக்களுக்கு சேவை செய்ய விரும்புவதாகவும் கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், நான் சம்பாதிப்பதற்காக இந்தத் தேர்தலில் பேட்டியிடவில்லை. முழுக்க முழுக்க மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவே தேர்தலில் போட்டியிடுகிறேன் எனவும், இதற்காகவே வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன் எனவும் கூறியிருக்கிறார்.
அப்போது, அங்கிருந்த செய்தியாளர்கள், இங்கு ஏற்கெனவே நிறைய அரசியல்வாதிகள் இருக்கும் போது நீங்கள் வந்து என்ன செய்ய போகின்றீர்கள் எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு பதிலளித்த மதுரை விநாயகம், இங்கு உள்ளவர்களை மூன்று முறை எம்பி ஆக்கினாலும் அல்லது சட்டமன்ற உறுப்பினர்கள் ஆக்கினாலும் சம்பளத்தையும் மூன்று ஓய்வூதியத்தையும் வாங்கிக்கொள்கிறார்கள் எனவும், இதனால் மக்களின் வரிப்பணம் முழுவதும் அவர்களிடம் சென்று விடுவதாகவும் கூறியிருக்கிறார்.
மேலும் தொடர்ந்து பேசிய மதுரை விநாயகம், நான் வெற்றி பெற்றால் எனது தொகுதி மக்களுக்கு வீட்டு வரி, குடிநீர் வரி, சொத்து வரி, உள்ளிட்டவற்றை வசூலிக்க மாட்டேன் எனத் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல், பொள்ளாச்சி தொகுதியில் தென்னை விவசாயிகளின் வளர்ச்சிக்கான பணிகளை செய்வேன் எனவும், நீர்நிலைத் திட்டங்களை சரி செய்வேன் எனவும் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு, பொள்ளாச்சியில் போட்டியிட போவதாக கூறி சவப்பெட்டியோடு ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், மறுபடியும் அதே பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட போவதாக முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் சீருடையோடு வந்து வேட்புமனு தாக்கல் செய்ததால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.