தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் ஈரோட்டில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியளித்தார்
அப்போது அவர் கூறும்போது,
"காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி பதவியேற்றபோது, மோடிக்கு இவர் சரிசமமாக இருப்பாரா, மோடிக்கு நிகராக இருப்பாரா என்றெல்லாம் சொன்னவர்கள், இன்றைக்கு மோடியை வீழ்த்தக்கூடிய மிகபெரிய சக்தியாக மாறியிருக்கிறார். ஓராண்டு காலத்திற்குள்ளாகவே பாஜகவின் மிகப்பெரிய கோட்டைகளாக திகழ்ந்தவற்றை, ராகுல் காந்தி தகர்த்து இருக்கிறார். இன்னும் நான்கு மாதத்தில் நடைபெற இருக்கிற மக்களவைத் தேர்தலிலும், காங்கிரஸை மிகப்பெரிய வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும் பலம் ராகுல் காந்திக்கு உண்டு என சொல்கிறார்கள்.
.
காங்கிரசும் அதன் கூட்டணிக்கட்சிகளும் வெற்றி பெறும் என்பது மட்டுமல்ல, ராகுல்காந்தி விரைவில் இந்த நாட்டின் பிரதமராக வருவதற்கான நல்ல சூழ்நிலைகள் ஏற்பட்டு இருக்கிறது. மோடியைப் பொறுத்தவரை இந்த தோல்வியை ஏற்றுக்கொண்டு, அவருக்கு கொஞ்சமாவது ரோஷம் இருந்தால், உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். ஏனென்றால் என்னை யாரும் வீழ்த்த முடியாது, என்னை வீழ்த்த இந்தியாவில் யாரும் பிறக்கவில்லை என்றெல்லாம் எள்ளி நகையாடினார். ராகுல்காந்தியை சிறுவன், பொடியன் என்றெல்லாம் கேலி பேசினார். ஆனால், இன்றைக்கு மிகப்பெரிய தோல்வியைப் பெற்று இருக்கின்ற மோடி, உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். ஜனநாயகத்தில் கொஞ்சமாவது நம்பிக்கை இருக்குமேயானால், அவர் கண்டிப்பாக ராஜினாமா செய்ய வேண்டும்.
அதேபோல், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், 24 மணி நேரமாக எதையோ பிதற்றிக்கொண்டு இருக்கிறார். அவரது பேச்சு மரணஓலம் போல் இருக்கிறது. நாங்கள் இந்த இந்த தேர்தலில் தோல்வி அடையவில்லை. இது வெற்றிகரமான தோல்வி என்று தமிழிசை சொல்கிறார். இது என்ன வெற்றிகரமான தோல்வி என்று எனக்குப் புரியவில்லை. ஒன்று ஆணாக இருக்க வேண்டும்; இல்லையென்றால் பெண்ணாக இருக்க வேண்டும்; நடுவிலே ஏதோ ஒன்று என்பது போல, வெற்றியும் இல்லை, தோல்வியும் இல்லை என்பது போல் தமிழிசை சொல்வது இருக்கிறது.தோல்வியில் சிறிய தோல்வி, பெரிய தோல்வி என்றால் என்னவென்று எனக்குப் புரியவில்லை. 10 ரூபாய் திருடினாலும், ஒரு லட்ச ரூபாய் திருடினாலும் திருடன், திருடன் தான். ஆகவே, தோல்வி என்பதை சிறிய தோல்வி, பெரிய தோல்வி என்று சப்பைக்கட்டு கட்டுவது, தமிழிசைக்கு ஏற்றதல்ல. அவரைப் பொறுத்தவரை விரக்தியின் உச்சகட்டத்தில் சென்று விட்டார்.
தினந்தோறும் அவர் பத்திரிகையாளர்களிடம் பேசுவது எல்லாம் விரயமாகிக் கொண்டு இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை, தமிழிசை பாஜகவை விட்டு வெளியேறி ஒரு தனிக்கட்சி ஆரம்பித்தால், ஏதாவது கொஞ்சம் உபயோகமாக இருக்கும். ஏதாவது ஒரு ஊரிலே, ஒரு வார்டிலே வெற்றி பெறுவதற்கான சூழ்நிலை ஏற்படும்.
தேர்தல் முடிவு என்பதை ராகுல் காந்தி பிரச்சாரத்திற்கு கிடைத்த வெற்றியாகவும், மோடியின் நடவடிக்கைகள், திட்ட்டங்களில் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள் என்பதைத்தான் வெளிப்படுத்துகிறது. ஆகவே, இது ராகுல்காந்திக்கு வெற்றியாகவும், மோடிக்கு தோல்வியாகவும் அமைந்துள்ளது.
கஜா புயல் பாதிக்கப்பட்ட இடத்தில் இருந்து கமிஷன் அடிக்க ஆரம்பித்து விட்டார்கள். ஈரோட்டிலும், அதன் சுற்றுப்புறங்களிலும் உள்ள கூட்டுறவு சங்கங்களில் லட்சக்கணக்கான போர்வைகள் விற்பனையாகாமல் முடங்கிக் கிடக்கின்றன. அவற்றை நிவாராணத்திற்கு வழங்க வாங்காமல், ஆந்திராவில் இருந்து குறைந்த விலையில், தரம் குறைந்த போர்வைகளை வாங்கி விநியோகித்து, கமிஷன் அடித்து இருக்கிறார்கள். இங்கு பாதிக்கப்பட்ட நெசவாளர்களுக்கு உதவி செய்ய எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இங்கே முடங்கிய போர்வைகளை அவர்கள் நிவாரணப் பணிக்கு பயன்படுத்தி இருந்தால், இங்குள்ள நெசவாளர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஏனென்றால் ஈரோடு மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இருக்கிற நெசவாளர்களின் போர்வைகள் தரம் வாய்ந்ததாகவும், விலை குறைவாகவும் இருக்கிறது. அதைப்பயன்படுத்தாமல் கமிஷனுக்காக வெளி மாநிலங்களில் இருந்து போர்வைகளை வாங்கி இருப்பது கண்டிக்கத்தக்கது.
புயல் நிவாரணத்திலும் ஊழல், கமிஷனில் அரசு ஈடுபடுமானால், கண்டிப்பாக தமிழக மக்கள் அதிமுகவிற்கு டெபாசிட் கூட கிடைக்காத நிலையை ஏற்படுத்துவார்கள்.
அரசு மதுபானக்கடைகளை நாங்கள் மூடுவோம் என்று சொன்னவர்கள், இன்று புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் பல மதுக்கடைகளை புதிதாகத் திறந்து இருக்கின்றனர். இது கண்டிக்கத்தக்கது. அங்குள்ள மக்கள் ஒருநாள் உணவிற்கே கஷ்டப்படும் நிலையில், அவர்களுக்கு கிடைக்கும் 200, 300 ரூபாயை மதுக்கடைகளில் செலவிட இந்த அரசு ஏற்பாடு செய்து விட்டால், அவர்களது குடும்பத்தின் கதி என்னவாகும் என நினைத்துப் பார்க்க வேண்டும். ஆகவே, அங்கு டாஸ்மாக் கடைகளைத் திறந்தது தவறு; உடனடியாக கடைகளை மூட வேண்டும்.
திமுக கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை. ஸ்டாலின் மிகத்தெளிவாக அறிவித்து இருக்கிறார்கள். இந்த கூட்டணியைப் பொறுத்தவரை சில செய்திகள் பத்திரிகைகளில் பெரிதுபடுத்தப்படுகின்றன. திருமாவளவனுக்கும், வைகோவிற்கு கருத்து வேறுபாடு என்றெல்லாம் சொல்லப்பட்டது. ஆனால், நேற்றே அவர்கள் இருவரும் சந்தித்து பேசி விட்டனர். ஆகவே, திமுக -காங்கிரஸ் கூட்டணி மிக பலமாக இருக்கிறது. வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி புதுச்சேரியையும் சேர்த்து 40 இடங்களிலும் வெற்றி பெறும்.
திமுக - காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ்க்கு எவ்வளவு எண்ணிக்கை, எந்தெந்த இடங்கள் என்பதெல்லாம், தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்பு, ஸ்டாலினும், ராகுல்காந்தியும் பேசி முடிவு எடுப்பார்கள்.
பாஜகவிற்கு எதிரான திமுக - காங்கிரஸ் கூட்டணி மிக வலுவாக, மிக பலமாக இருக்கும். மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் பெற்ற வெற்றியை, தமிழக மக்கள் தங்களுடைய வெற்றியாகக் கருதி கொண்டாடுகின்றனர். எல்லா இடங்களிலும் மக்கள் எனக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தது, தமிழகத்திலும் மோடிக்கு சமாதி கட்டப்படும் என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கின்றனர்.
குட்கா ஊழலில் அமைச்சர் தவறு செய்து இருக்கிறார் என்பதை ஆதாரத்தோடு பிடித்து இருக்கின்றனர். ஆகவே, அவரது உதவியாளரை விசாரணைக்கு அழைப்பது, சமையல்காரரை விசாரணைக்கு அழைப்பது, ஓட்டுநரை விசாரணைக்கு அழைப்பது என்பதெல்லாம் தேவையற்ற ஒன்று. நேரடியாக, சம்பந்தப்பட்ட அமைச்சரையே கைது செய்து விசாரணை செய்ய வேண்டும்.
தமிழகத்தில் பாஜக அநாதையாகத்தான் நிற்கும் என்று நான் நினைக்கிறேன். இந்த வெற்றிகளுக்குப் பிறகு, இங்குள்ள எந்தக்கட்சியும் அவர்களோடு கூட்டு சேர வாய்ப்பில்லை. அதிமுகவோ, தினகரன் கட்சியோ, யாரும் நெருப்பை தங்கள் தலையில் கொட்டிக்கொள்ள மாட்டார்கள். விவசாயிகளுக்கு பாதகமில்லாமல் உயர்மின் கோபுரங்கள் அமைக்க வேண்டும். பாதிக்கப்பட்டால், அதற்குரிய நஷ்டஈட்டை வழங்க வேண்டும்.
கமல் கட்சி ஆரம்பித்து விட்டார். ரஜினியைப் பொறுத்தவரை அவரது படம் வெளிவரும் முன்பு ஏதாவது ஸ்டண்ட் அடிக்க வேண்டும் என்பதற்காக 20 சதவீதம், 30 சதவீதம் பணி முடிந்தது என்று கதை சொல்லிக் கொண்டு இருக்கிறார். அவர் கட்சி ஆரம்பிப்பார் என்ற நம்பிக்கையும் இல்லை. கட்சி ஆரம்பிக்காமல், நிம்மதியாக இருங்கள்; பாஜகவின் வலையில் விழுந்து விடாதீர்கள் என்பதுதான் ரஜினிக்கு நான் சொல்லும் அறிவுரை.
ரிசர்வ் வங்கி தலைமை அதிகாரி, பொருளாதார ஆலோசகர் ராஜினாமா செய்ய மோடியின் மோசமான ஆட்சியே காரணம். இத்தனை பேர் ராஜினாமா செய்வதை விட, மோடி ராஜினாமா செய்து விட்டால் பிரச்சினை தீரும்.
‘தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் செயல்பாடுகள் குறித்து கேட்டபோது’, ‘தேர்தலிலே காங்கிரஸ் வெற்றி பெற்றதால் மகிழ்ச்சியுடன் உங்களைப் பார்த்து பேசிக்கொண்டு இருக்கிறேன். இந்த நேரத்தில் அநாவசியமான கேள்விகளுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. ஏனேன்றால் வெற்றியைக் கொண்டாடும் நேரத்தில் சில தேவையில்லாத, விஷயங்களைப் பேச விரும்பவில்லை’ என்றார்.