கடந்த இரண்டு வருடங்களாகவே உலக அளவில் மிகப்பெரும் பேசுபொருளாக இருக்கிறது கரோனா. தற்போதுவரை உலக நாடுகள் கரோனா பாதிப்புக்கு எதிராகத் தடுப்பூசிகளைச் செலுத்தி போராடிவருகிறது. தற்போது புதிதாக 'ஒமிக்ரான்' என்ற வைரஸ் பரவலால் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டிய நிலையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.
இந்தியாவில் வட மாநிலங்களில் கரோனா தொற்று கடந்த சில தினங்களாக அதிகரித்துவருகிறது. மஹாராஷ்ட்ரா, ராஜஸ்தான், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை சீராக அதிகரித்துவருகிறது. டெல்லியில் கரோனா பாதிப்புக்கு உள்ளான நபர்களைப் பரிசோதனை செய்ததில் 4 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய அளவில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 45இல் இருந்து 49 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் 'ஒமிக்ரான்' வைரஸ் பரவாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என தமிழ்நாடு சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள அவசர கடிதத்தில், ''கரோனா தடுப்பூசி செலுத்த தவறியவர்களைக் கண்டறிந்து தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனா படுக்கைகள், ஆக்சிஜன் படுக்கைகள், ஐசியூ படுக்கைகள் ஆகியவற்றின் இருப்பை மாவட்ட நிர்வாகம் உறுதிசெய்ய வேண்டும். மருத்துவப் பணியாளர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியாவிலிருந்து சென்னை வந்த நபருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. அவரது மரபணுவில் எஸ்-ஜீன் மரபணு மாற்றம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அந்த மரபணு மாதிரி பெங்களூரு ஆய்வகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.