திருமணம், காதணி விழா உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிகளும் மண்டபங்களில் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை தஞ்சை மாவட்டங்களில் தற்போது நடக்க வேண்டிய கோடிகளைக் குவிக்கும் மொய் விருந்துகள் நடத்தவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காரணம் கரோனா தொற்று பரவலைத் தடுக்க பேராவூரணியில் உள்ள மண்டபங்களில் மொய் விருந்துகள் நடத்த அனுமதிக்க வேண்டாம் என்று அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
இந்த நிலையில் தான் திருமணங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் குறைவான உறவினர்களுடன் வீடுகளிலேயே நடத்தப்பட்டு வருகிறது. இனி வருங்காலங்களில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடத்த உள்ளாட்சி அமைப்புகளிடம் தெரிவித்து உரிய அனுமதி பெற வேண்டும் என்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
அதாவது மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கரோனா தொற்று பரவாமல் தடுக்கக் கூட்டம் கூடுவதைத் தவிர்ப்பதுடன் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். மேலும் திருமணம், காதணி விழா உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடத்தும் முன்பு அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளிடம் தகவல் தெரிவித்து கிராம ஊராட்சி மக்கள் வட்டாட்சியரிடமும் பேரூராட்சி, நகராட்சி மக்கள் அந்தந்த நகராட்சி, பேரூராட்சிகளிடமும் அனுமதி பெற்று குறைந்த அளவில் ஆட்களுடன் விழாக்களை நடத்தலாம் என்று அறிவித்துள்ளார்.
இது குறித்து கிராம மக்கள் கூறும்போது, நகராட்சி, பேரூராட்சிகளில் சுப நிகழ்ச்சிகள் நடத்த அந்தந்த நிர்வாகத்திடம் அனுமதி வாங்குவது போல கிராம ஊராட்சிகளுக்கு ஊராட்சி அமைப்புகளிடமே அனுமதி பெற உத்தவரவிட வேண்டும். கிராம மக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை நாட கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் வழியாகச் செல்லும் போது கால விரயம் ஆகும். அதாவது வருவாய்த் துறையினர் கரோனா சம்மந்தமான பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையில் சுப நிகழ்ச்சி விண்ணப்பங்களைக் கவனிக்க தாமதம் ஏற்படும். அதனால் கிராம உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெற்று நடத்த உத்தரவிட வேண்டும் என்றனர்.