சென்னை, திருவான்மியூரில் தமிழ்நாடு மருத்துவதுறை அமைச்சர் மா. சுப்ரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசுகையில்,
''தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, கடலூர் போன்ற நான்கு மாவட்டங்களில் 10, 20 என்ற வகையில் தொற்று கூடியிருக்கிறது. ஒருசில மாவட்டங்களில் 2, 3 என்ற அளவில் நேற்றைக்கும் இன்றைக்கும் ஏற்றத்தாழ்வு இருக்கிறது. ஆனால் ஒட்டுமொத்தமாக நேற்று முன்தினம் 4,506 ஆக இருந்த கரோனா தொற்று 4,481 ஆக குறைந்திருக்கிறது. ஒட்டுமொத்த எண்ணிக்கையைப் பொருத்தவரை 20, 25 என்ற எண்ணிக்கையில் குறைந்திருக்கிறது. ஆனால் உள்ளே சென்று பார்க்கும்போது மாவட்ட எண்ணிக்கையில் ஒருசில மாவட்டங்களில் 10, 20 என எண்ணிக்கை கூடியிருக்கிறது.
இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் துறை நிர்வாகிகள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். கடலூருக்கு நாளை நான் செல்ல இருக்கிறேன். நாளை மறுநாள் திங்கட்கிழமை திருவண்ணாமலைக்கு நானும் துறைச் செயலாளரும் செல்ல இருக்கிறோம். எதனால் கூடுகிறது என ஆய்வு செய்ய இருக்கிறோம். ஆனால், மகிழ்ச்சியான விஷயம் 4,500 என்ற அளவில் தொற்று குறைந்திருந்தாலும் கூட கரோனா பரிசோதனை செய்யும் எண்ணிக்கை ஏறத்தாழ ஒரு லட்சத்து 60 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த ஆட்சியில் எண்ணிக்கை தொற்று குறைந்த உடன் கரோனா பரிசோதனை எண்ணிக்கையும் குறைக்கப்படும். ஆனால் இந்த அரசு தமிழ்நாடு முதல்வர் மருத்துவத்துறைக்கு அளித்துள்ள கட்டளையின்படி தொற்று எண்ணிக்கை குறைந்தாலும் பரிசோதனை எண்ணிக்கை குறையக் கூடாது என்பதால், ஒரு லட்சத்து 60 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் தொடர்ந்து கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
செங்கல்பட்டில் தடுப்பூசி உற்பத்தியைத் தொடங்க அதிமுக ஆட்சிக் காலத்தில் நடவடிக்கை எடுக்காதது ஏன்? எவ்வளவு தடுப்பூசியை ஒன்றிய அரசு கொள்முதல் செய்து கொடுக்கிறார்களோ அதை எல்லாம் மக்களுக்கு வழங்க தயாராக இருக்கிறோம். இப்பொழுதைப் பொறுத்தவரையில் கோவாக்சின், கோவிஷீல்டு இந்த இரண்டு தடுப்பூசிகள் வந்துகொண்டிருக்கின்றன. ஸ்புட்னிக், மார்டனா போன்ற பல்வேறு தடுப்பூசிகள் அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும் ஒன்றிய அரசின் சார்பில் அவை கொள்முதல் செய்யப்பட்டு மாநில அரசுக்கு அவை ஒதுக்கீடு செய்யப்பட்ட பின் அதனை மாவட்ட வாரியாக நாங்கள் பிரித்துக் கொடுப்போம்''என்றார்.