வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் 'வாரிசு அரசியலை ஒழிக்க வேண்டும்' என்பதே அடிப்படை கோஷமாக இருக்கும் என முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை, ''குடும்ப அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதுதான் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் எழுகின்ற கோஷமாக இருக்கும். இதுதான் இந்தியா முழுவதும் எழுகின்ற ஒரே குரல். குடும்ப அரசியலுக்கு முடிவு கட்டுங்கள். அதிமுக உருவானதற்கான காரணமே குடும்ப அரசியலை ஒழிப்பதற்காகத்தான்.
யாராவது சொல்லுங்கள் இத்தனை பேர் ஒரே குடும்பத்திலிருந்து முதலமைச்சரானது இந்தியாவில் எங்காவது நடந்திருக்கிறதா? நேரு குடும்பத்தில் கூட இப்படி இருந்ததில்லையே. முதலமைச்சருக்கு சமமான பதவியில் ஒரு ஐந்து ஆறு பேர் தொடர்ந்து ஒரே குடும்பத்திலிருந்து கோலோச்சிக் கொண்டிருக்கிறார்கள். இது ஒழிக்கப்பட வேண்டும்'' என்றார்.