திருப்பூர் மாவட்டம் அவினாசி ரோடு அருகே உள்ள விவேகானந்தா ஆசிரமத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட மூன்று சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் தமிழக அரசிற்கு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அடுத்த 48 மணிநேரத்திற்குள் இது குறித்து விளக்கமளிக்க அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரிக்க மூத்த ஐஏஎஸ் அதிகாரி மணிவாசகம் தலைமையில் விசாரணைக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்த காப்பகத்தில் தமிழக சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''காப்பக நிர்வாகம் அலட்சியமாக செயல்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட காப்பகம் மூடப்படுகிறது. தமிழக அரசு கண்டிப்பாக தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு திமுக சார்பில் நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது. அரசு சார்பில் நிவாரணம் அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. காப்பகத்தின் உரிமையாளர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். தாய் இருந்தால் ஒரு உப்புக்கரைசல் கொடுத்திருந்தால் கூட புள்ளைங்க பொழச்சிருக்கும். திருப்பூரில் இதைப்போன்ற கிட்டத்தட்ட 13 காப்பகங்கள் உள்ளது. எல்லா காப்பகத்திலும் திடீர் ஆய்வு செய்யப்படும்.இங்குள்ள குழந்தைகள் இனி ஈரோட்டில் உள்ள அரசு காப்பகத்தில் வைத்து பராமரிக்கப்படுவர். இவ்வளவு பெரிய கான்கிரீட் கட்டிடம் இருக்கிறது. ஆனால் புள்ளைங்க தகர சீட் போட்ட அறையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்'' என்றார்.