மத்திய அமைச்சர்கள் 33 பேர் மீது ஊழல் குற்றசாட்டுகள் இருக்கின்றன. அவர்கள் வீட்டில் எல்லாம் அமலாக்கத்துறையினர் ஏன் சோதனை செய்யவில்லை. மத்திய அமைச்சர்கள் எல்லாம் புனிதர்கள் ஆகிவிட்டார்களா? எனக் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ். அழகிரி கடுமையாக விமர்சித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் புவனகிரியில் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதில் அவர், “மோடி ஆட்சியில் தமிழகத்தில் மீண்டும் ஒரு அமைச்சரை அமலாக்கத்துறையினர் விசாரித்து வருகின்றனர். இது நாங்கள் எதிர்பார்த்த ஒன்று தான். மேடையில் சென்று மக்களிடம் வாதங்களை வைக்காமல் கொல்லைப்புறமாக வந்து எங்களை அடக்க நினைக்கிறார்கள்.
பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் இருக்கும் அமைச்சர்கள் எல்லாம் அரிச்சந்திரர்களா? அந்த மாநிலங்களுக்கு எல்லாம் அமலாக்கத்துறை ஏன் செல்லவில்லை. மோடி அரசைத் தமிழக முதல்வர் கடுமையாக விமர்சித்துப் பரப்புரை செய்து வருகிறார் என்ற காரணத்திற்காக தமிழக அரசைக் குற்றம்சாட்டி வருகிறார்கள். மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளை காங்கிரஸ் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழ்நாடு ஒரு சுயமரியாதை உணர்வு உள்ள மாநிலம். அதனால், தமிழக மக்கள் இதற்கெல்லாம் தலை வணங்க மாட்டார்கள். மோடி உள்ளிட்ட யாருடைய அடக்கு முறைகளையும் அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
மத்திய அமைச்சர்கள் 33 பேர் மீது ஊழல் குற்றசாட்டுகள் இருக்கின்றன. அவர்கள் வீட்டில் எல்லாம் அமலாக்கத்துறையினர் ஏன் சோதனை செய்யவில்லை. மத்திய அமைச்சர்கள் எல்லாம் புனிதர்கள் ஆகிவிட்டார்களா?. அண்ணாமலை 200 பட்டியல் வேண்டுமானாலும் வெளியிடட்டும். எதைப் பற்றியும் எங்களுக்குக் கவலை இல்லை. தமிழக ஆளுநர் தனக்கு இல்லாத அதிகாரங்களைப் பற்றி எல்லாம் பேசுகிறார். ஆளுநர் அவரது கடமையை மட்டும் தான் செய்ய வேண்டும். ஆளுநர் எடுத்த 3 நடவடிக்கைகளும் தோல்வி அடைந்து விட்டன” எனக் கூறினார்.