சென்னை ராயபுரம் செட்டித்தோட்டம் அருகே பள்ளி மாணவியை ஈவ்டீஸிங் செய்த கஞ்சா போதை இளைஞர் மீது புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் கொலையில் முடிந்தது விவகாரம். அதன் காரணமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர்.
சென்னை ராயபுரம் செட்டித்தோட்டம் பகுதியை சேர்ந்தவன் வினோத்குமார். கஞ்சா பேர்வழியாக இவன் வீட்டுக்கு அருகியுள்ள ஒரு பள்ளி மாணவியை ஆபாசமாக பேசி ஈவ்டீஸிங் செய்துள்ளான். இதை அறிந்த மாணவியின் பெற்றோர் ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
வினோத்குமாரை அழைத்து ராயபுரம் காவல் ஆய்வாளர் ராஜா ராபர்ட் நடவடிக்கை எடுக்காமல் வெறுமனே கண்டித்து அனுப்பியதாக கூறப்படுகிறது. புகாரினால் ஆத்திரம் அடைந்த வினோத்குமார் அந்த மாணவியின் வீட்டிற்கு மீண்டும் சென்று மிகவும் ஆபாசமாக அவரது தாயிடமும், அந்த மாணவியிடமும் பேசி மிரட்டியுள்ளான்.
இதனை கேள்விப்பட்ட மாணவியின் தந்தை மாலையில் அவரது உறவினர்களுடன் வினோத்குமாரின் வீட்டிற்கு சென்று தட்டிக்கேட்டுள்ளார். அப்போது வினோத்குமாரின் உறவினர்களுக்கும் பாதிக்கப்பட்ட மாணவியின் உறவினர்களுக்கும் மோதல் ஏற்பட்டு கஞ்சா போதையில் இருந்த வினோத்குமார் மேரி என்ற பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளான்.
இந்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்த புகார் அளிக்கப்பட்டிருந்தபொழுதே சரியான நடவடிக்கை எடுத்திருந்தால் இந்தநிலை ஏற்பட்டிருக்காது என குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் நடவடிக்கை எடுக்காத காவல் ஆய்வாளர் ராஜா ராபர்டை பணி இடைநீக்கம் செய்ய காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் உத்தரவிவிட்டார். மேலும் இதுபோன்ற ஈவ்டீஸிங் வழக்குகளை உடனடியாக தீவிரம் காட்டி விசாரிக்க வேண்டும் என கூறியுள்ளார்.