Skip to main content

‘சித்த மருத்துவத்தால் கரோனாவிலிருந்து மீண்டேன்..’- லண்டன் நண்பர் பொன்ராஜிடம் பகிர்ந்த தகவல்!

Published on 13/04/2020 | Edited on 13/04/2020


அப்துல்கலாம் லட்சிய இந்தியா இயக்கத்தின் தலைமை வழிகாட்டி பொன்ராஜ், நம்மைத் தொடர்புகொண்டார். கரோனா நோய்த் தொற்றால் லண்டன்- மான்செஸ்டர் நகரில் பாதிக்கப்பட்ட தனது நண்பர், LONDON NHS Admission கிடைக்காமல், சித்த மருத்துவத்தின் மூலமாக மீண்ட அனுபவம் குறித்து பேசினார்.

“தனது அலுவலகத்தில் வேலை பார்க்கும் 40 சதவீதப் பணியாளர்கள் கரோனா நோய்த் தொற்று பாசிட்டிவ் ஆகி பாதிக்கப்பட்டுள்ள நிலைமையில், அவரும், அவரது  மனைவியும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். NHS அட்மிஷன் முதல் ஸ்டேஜில் போட முடியாது, 4- வது ஸ்டேஜில் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிப்போம் என்று, தமிழ்நாடு அரசு சொல்வதைப்போலவே சொல்லி, எவ்வித மருத்துவ உதவியும் கொடுக்காமல் தனிமைப்படுத்தி உள்ளனர். வீட்டிலேயே இருங்கள், 4-ஆவது நிலைக்கு நோய் முற்றினால் மட்டும் எங்களை அழையுங்கள் என்று சொல்லி, வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு விட்ட நிலையில், அவர்கள் நமது பாரம்பரிய சித்த மருத்துவத்தையும், நமது தமிழ் பாரம்பரிய உணவு பழக்கவழக்கத்தையும் கடைப்பிடித்து மீண்டெழுந்த ஒரு உண்மை சம்பவம் இது..” எனச் சொன்ன பொன்ராஜ், லண்டன் நண்பரின் பெயரை மறைத்து, அவர் அளித்தத் தகவலை அப்படியே நம்மிடம் பகிர்ந்துகொண்டார். 

 

coronavirus medicine  Information shared by London friend Ponraj


அந்த தகவல் இதோ- நண்பர்களே, கரோனா தொற்று மிகக் கொடுமையானது. பாதிக்கப்பட்ட எல்லோருக்கும் அனைத்து  அறிகுறிகளும் இருப்பதில்லை, சிலருக்குத்  தாங்கமுடியாத உடல்வலி, தலை, தொண்டை வலி மற்றும் மணம், சுவையின்மை போன்றவற்றோடு வந்து சென்றுவிடும். சிலருக்கு அனைத்து அறிகுறிகளுடன், எழுந்து நிற்பதிலிருந்து, மூச்சு விடுவதுவரை மிகச் சிரமமாக இருக்கும். 

நான் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டு இன்றோடு 21 நாட்கள் ஆகிவிட்டன. 10 நாட்களிலேயே அதிலிருந்து மீண்டு விட்டாலும், உடல் அசதி மற்றும் அதிக நேரம் பேச முடியாத நிலை (நுரையீரல் பாதிப்பு கண்டிப்பாக இருக்கும்) இப்போதும் எனக்கு உள்ளது. நான் வழக்கமான (Paracetamol) மாத்திரைகளுடன், சில சித்த மருத்துவ முறைகளையும், சிறு சிறு உடற்பயிற்சி, சூரிய ஒளியில் அமர்தல், மஞ்சள் மற்றும், ஓமம் கலந்த தண்ணீரில் ஆவிப்பிடித்தல் எனப் பக்கவிளைவுகள் அற்ற நம் பழக்க வழக்கங்களைக் கடைப்பிடித்தே இதிலிருந்து மீண்டேன். சித்த மருத்துவத்தில் உள்ள நமது உணவுப்பழக்கங்கள் கரோனா அறிகுறிகளின் தாக்கங்களை, வலிகளைக் குறைக்கின்றன என்பது நான் கண்ட அனுபவபூர்வமான உண்மை. நிலவேம்பு குடிநீர் சூரணம் காய்ச்சலை வெகுவாகக் கட்டுப்படுத்தியது.

 

http://onelink.to/nknapp



என் மனைவிக்கு ஏற்கனவே சில பிரச்னைகள் இருப்பதால் (existing medical conditions) கரோனா அவரை அதிகம் படுத்தி எடுத்துவிட்டது, அவர் எழுந்து உட்காரவே 16 நாட்கள் ஆகிவிட்டன. நாங்கள் 111 அழைப்பை மூன்று முறை தொடர்புகொண்டோம், ஆனால் அறிகுறிகள் அனைத்தையும் கேட்டு விட்டு, வீட்டிலேயே இருங்கள் என்று அறிவுறுத்தினார்களே தவிர, வேறு எந்த உதவியும் செய்யவில்லை. வாயில் நீலம் பாய்ந்து மூச்சு விட சிரமப்பட்டால் மட்டுமே எங்களை அழையுங்கள் என்று சற்று கராறாகவே அவர்கள் சொல்லியது, நாம் எப்படிப்பட்ட ஒரு வளர்ச்சியடைந்த தேசத்தில் இருக்கிறோம் என்பதை நினைத்து வெட்கப்பட வைத்தது.

கரோனா இவருக்கு வரும்,  இவருக்கு வராது என்றில்லை. அது அனைவரையும் தொற்றும் வாய்ப்பே  இங்கு அதிகம். ஆனால், பாதிப்பு என்பது அவர்களிடம் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்தே அமைகிறது. இந்தியர்களுக்கு பாதிப்பு இருந்தும் இறப்பு எண்ணிக்கை கட்டுக்குள் இருப்பதற்குக் காரணம் நம்முடைய உணவுப் பழக்க வழக்கங்கள் தான். நாம் அன்றாடம்  உணவில் சேர்க்கும் மஞ்சள், இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம், வெந்தயம், மல்லி போன்றவற்றில் இயற்கை்யாகவே நோய் எதிர்ப்பு சக்தியுள்ளது. 

எனவே நண்பர்களே, கரோனாவைக் கண்டு மிரளவேண்டாம். முடிந்தவரை அது அண்டாமல் விலகியிருங்கள், தொற்றிக்கொண்டால் பயம் கொள்ள வேண்டாம். துணிவுடனும், நம்பிக்கையுடன் எதிர்கொள்ளுங்கள்.

சென்னை உயர்நீதிமன்றம் கூட, 'தடுப்பு மருந்துகளைப் பொறுத்தவரை, மற்ற நாடுகளோடு ஒப்பிடுகையில் பெரிய கண்டுபிடிப்புகள் எதையும் நாம் மேற்கொள்ளவில்லை. ஏற்கனவே, டெங்கு காய்ச்சல் பரவியபோது, அதற்காக நிலவேம்பு கசாயம் அளிக்கப்பட்டது. தற்போது இந்திய மருத்துவ முறையில் மருந்துகள் உள்ளனவா என்பதை ஏன் ஆய்வு செய்ய கூடாது?’எனக் கேள்வி எழுப்பியுள்ளது. 

மருத்துவ உலகம், சித்த மருத்துவத்தின் மகத்துவத்தை ஆய்ந்தறிந்து, அதனை மக்களுக்குப் பயன்படச் செய்ய வேண்டும்.  



 

சார்ந்த செய்திகள்