தமிழ்நாடு பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராக இருப்பவர் எ.வ. வேலு. கடந்த நவம்பர் 3 ஆம் தேதி விடியற்காலை அமைச்சரின் வீடு, அவரது குடும்பத்தாரின் அறக்கட்டளை, தொழில் நிறுவனங்கள், அவருடன் தொழில் தொடர்புடைய நிறுவனங்களில் சோதனையைத் தொடங்கிய வருமானவரித்துறை அதிகாரிகள் நவம்பர் 7 ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற்று முடிந்தது. நவம்பர் 7 ஆம் தேதி இரவு 11 மணிக்கு தனது மகன்கள் குமரன், கம்பனுடன் செய்தியாளர்களைச் சந்தித்தார் அமைச்சர் எ.வ. வேலு. “வருமான வரித்துறை ரெய்டை நான் தவறு எனச் சொல்லமாட்டேன். நிறுவனங்கள் மீது அவர்கள் ஆய்வு செய்கிறார்கள் இது அவர்கள் பணி.
ஐடி என்கிற பெயரில் எனது நேரடி நேர்முக உதவியாளர் சுப்பிரமணியை 5 நாட்களாக அவரைத் தனியே வைத்து என்னுடன் பேசவிடாமல் என்னை தொடர்புப்படுத்தி பல கேள்விகளைக் கேட்டு டார்ச்சர் செய்துள்ளனர். எங்கெல்லாம் இடம் வாங்கியிருக்கிறேன் எனக் கேட்டுள்ளனர். அவர் கண்ணீர் விட்டு அழும் அளவுக்கு நிர்பந்தப்படுத்தியுள்ளனர். எனது ஓட்டுநரை அழைத்துச் சென்று தனிமைப்படுத்தி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்கள். எனக்கு கார் ஓட்டுவதை தவிர வேறு என்ன செய்துவிட்டார் அவர்? அதேபோல் நான், என் மனைவி, என் மகன்கள் தனித்தனியாக உள்ளோம். எல்லோரிடமும் கேள்வி கேட்டனர். கல்லூரியில் கிளார்க்குகள், மருத்துவக் கல்லூரி எச்.ஆர் களை கேள்வி கேட்டு டார்ச்சர் செய்துள்ளார்கள்.
திருவண்ணாமலை, விழுப்புரம், வந்தவாசி, கரூர், கோவையில் பல இடங்களில் ரெய்டு செய்ததோடு, என்னை தொடர்புப்படுத்தி கேள்வி கேட்டுள்ளார்கள். ஐ.டி ஆபிஸர்ஸ் அம்புகள், ஏவியவர்கள் எங்கேயோ இருக்கிறார்கள். 2021 சட்டமன்ற தேர்தலின்போது எங்கள் தலைவர் இங்கே இருந்தபோது ரெய்டு செய்தார்கள். என்னுடைய தேர்தல் பணியை இரண்டு நாள் தடுத்தார்கள். 50 ஆயிரம் வாக்குகளில் வெற்றி பெற வேண்டிய என்னை 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்துள்ளார்கள். எனக்கும் அந்த அறக்கட்டளைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மரியாதை நிமித்தமாக சேர்மன் என அழைக்கிறார்கள்.
நான் இந்த மண்ணுக்கு சொந்தக்காரன். நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன், திருவண்ணாமலைக்கு வந்தேன் ஜீவா அச்சகத்தை உருவாக்கினேன், லாரி தொழில் செய்தேன், சென்னையில் படத் தயாரிப்பு விநியோகஸ்தராக இருந்தேன், படத்தை தயாரித்தேன். அப்படி உருவாக்கிய பணத்தை வைத்துதான் என் அம்மா சரஸ்வதி பெயரில் அறக்கட்டளை உருவாக்கி கல்வி நிறுவனங்களை உருவாக்கினேன். இந்த பகுதி கிராமப்புற மக்களின் குடும்பங்களில் பட்டதாரிகளை உருவாக்கினேன்.
நான் தொடர்ந்து 6 முறை சட்டமன்ற உறுப்பினராகி மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்துவருகிறேன். நான் யாரிடமாவது கையூட்டை பெற்றிருக்கிறேன் என யாரையாவது சொல்லச் சொல்லுங்கள். 2006ல் கலைஞர் என்னை உணவுத்துறை அமைச்சராக்கியபோது அந்த அறக்கட்டளை தலைவர் பதவியிலிருந்து வெளியில் வந்துவிட்டேன். அதன் இப்போதைய தலைவர் என் மகன் குமரன். என் பெயரில் 48.33 ஏக்கர் நிலம், காந்தி நகரில் வீடு கட்டுவோர் சங்கம் மூலம் தரப்பட்ட மனையை அருணை மருத்துவக் கல்லூரிக்கு 33 ஆண்டுக்கு லீஸ்க்கு தந்துள்ளேன். என்ன வாடகை தருகிறார்கள் என்பது கூட எனக்கு தெரியாது. சென்னையில் எனக்கு ஒரு வீடு உள்ளது. அமைச்சரான பின் 1 சென்ட் இடம் கூட வாங்கவில்லை.
நான் வருடா வருடம் ஐடி கட்டுகிறேன். நான் ஐ.டியை ஏமாற்றுபவன் இல்லை. உணவுத்துறையை சிறப்பாக நடத்தினேன் என எங்கள் கலைஞர், இப்போதைய முதலமைச்சர், உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் பண்டாரி, வர்மா பாராட்டினார்கள். பத்திரிகைகள் பாராட்டியது. 2013 ஆம் ஆண்டு காவல்துறை மானியத்தில் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்தேன் என கோபமான ஜெயலலிதா, என் மீது 11 லட்சம் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு போட்டார். கீழ் நீதிமன்றம் அரசியல் உள்நோக்கத்தோடு போடப்பட்ட வழக்கு என தீர்ப்பளித்தது. அதன்பின் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் சென்றார்கள் அங்கும் நான் நிரபராதி எனச்சொல்லி மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தனர்.
நான் ஒரு அரசியல்வாதி, எம்.எல்.ஏ, அமைச்சர் அதனால் பொதுமக்கள், வியாபாரிகள், ஒப்பந்ததாரர்கள் எனப் பலரும் வந்து கோரிக்கை வைப்பார்கள். அது என்ன தவறா? அவர்களை எல்லாம் என்னுடன் தொடர்புப்படுத்தி ரெய்டு போவது என்பது எப்படி சரியானது. தமிழ்நாட்டில் பாஜகவில் தொழிலதிபர்கள் இல்லையா? யாரும் தொழில் செய்யவில்லையா ஏன் அவர்கள் இடங்களில் ரெய்டு செய்யவில்லை? திமுகவினரை மட்டும் குறி வைத்து ரெய்டு வருவது ஏன்? இந்த ரெய்டுக்கெல்லாம் திமுகவினர் யாரும் பயப்படுபவர்கள் அல்ல. சட்டப்படி நாங்கள் எப்போதும் நடந்து கொள்கிறோம். ரெய்டு செய்து எங்கள் உழைப்பை தடுத்துவிட முடியாது. முன்பு இரண்டு நாள், இப்போது 5 நாள் கழகப் பணி, அரசுப் பணிகள் தடை செய்துள்ளீர்கள். நான் முன்பை விட அதிகமாக உழைப்பேன்.
எங்கள் அமைச்சர் உதயநிதி, ‘கட்சிகளில் விவசாய அணி, தொண்டர் அணி, இளைஞர் அணி இருப்பது போல் பாஜவில் ஐடி ஒரு அணியாக செயல்படுகிறது’ எனச் சொன்னார். அதையே நானும் கூறுகிறேன். ஐ.டி, ஈ.டி என்பது இன்று நேற்றா இருக்கிறது? கழக முன்னணியினர், அமைச்சர்களை அச்சுறுத்தியது முன்பு எப்போதும் நடந்ததில்லை. இதற்கு முன்பு பிரதமராக இருந்த மன்மோகன்சிங் காலத்தில், உயர்ந்த மனிதர் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது எத்தனை ரெய்டு தமிழ்நாட்டில் நடத்தினார்? எதுவும் செய்யவில்லை. இப்போது நடப்பதற்கு காரணம் தேர்தல். நாடாளுமன்ற தேர்தலை முன்வைத்து திமுகவினரை அச்சுறுத்துவது எந்த விதத்தில் நியாயம்? மிசாவையே பார்த்தவர் எங்கள் முதலமைச்சர், நாங்கள் இந்த ரெய்டுக்கெல்லாம் அஞ்சமாட்டோம். நாடாளுமன்ற தேர்தல்தான் எங்கள் இலக்கு. 40க்கு 40 தான் எங்கள் இலக்கு அதில் வெற்றி பெறுவோம். ரெய்டு மூலம் எங்களை முடக்க முடியாது.
காஸா கிராண்ட் யார் என்றே எனக்கு தெரியாது. கோவை செல்லும்போது அப்பாசாமி என்பவரின் ஹோட்டலில் தங்குவேன். நான் எம்.எல்.ஏ, அமைச்சர் என்கிற முறையில் அவர் என்னை சந்தித்திருக்கலாம், மற்றபடி எனக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை. கோவை மீனா ஜெயக்குமார் கணவர் ஜெயக்குமார் திருவண்ணாமலையில் பிறந்தவர். அவர் தம்பி இப்போதும் இங்கு கழகத்தில் பொறுப்பில் உள்ளார். அவர் கோவையில் சென்று தொழில் தொடங்கி அங்கேயே திருமணம் செய்துகொண்டு வாழ்கிறார். நான் கோவை சென்றபோது முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி தான், உங்கள் ஊர்க்காரர் எனச் சொல்லி ஜெயக்குமாரை அறிமுகப்படுத்தி வைத்தார். ஊர்க்காரர் என்பதால் அவர் அவ்வப்போது என்னை வந்து சந்திப்பார். அவர் அங்கு 20 வருடமாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். என் ஊர்க்காரர் என்பதாலே அவரை என்னுடன் தொடர்புப்படுத்துவது எந்த விதத்தில் நியாயம்? என்ன ஆதாரம் இருக்கிறது. தனிப்பட்ட முறையில் என் கேரக்டரை அழிக்கப் பார்க்கிறார்கள்.
28 கோடி பணம் கைப்பற்றப்பட்டதாகத் தகவல் பரவியிருக்கிறது. என் வீட்டில், என் மனைவி வீட்டில், என் மகன்கள் வீட்டில், கல்லூரி வளாகத்தில் ஒரு பைசா கூட எடுக்கவில்லை. அவன் அவன் தொழில் செய்கிறான், சம்பாதிக்கிறான். கட்சியில் ஒரு தொண்டன் தானிப்பாடி முருசேகன், பெட்ரோல் பங்க், ரைஸ் மில் நடத்துகிறார். அவரிடத்தில் கைப்பற்றியது என் பணமாகிடுமா? அருணை. வெங்கட் ஒப்பந்ததாராக இருக்கிறார், திமுக அனுதாபி. அதிமுக ஆட்சியில் ஒப்பந்தம் எடுத்தவர், அவர் வீட்டில் நடக்கும் ரெய்டை என்னோடு எப்படி சம்பந்தப்படுத்த முடிகிறது? சென்னையில் அபிராமி தியேட்டர் வாங்கிய தகவல் உண்மையில்லை. அபிராமி ராமநாதன் யார் என்றே தெரியாது, நேரடி பரிச்சயம் கிடையாது” என நீண்ட விளக்கம் அளித்தார்.