கடந்த 22 ந் தேதி அன்று படுகொலை செய்யப்பட்ட முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி அவரது கணவர் மற்றும் பணிப்பெண் உள்ளிட்ட மூன்று பேர் படுகொலையில் கைதான கார்த்திகேயன் என்கிற தனி நபரால் சாத்தியமில்லை. உடன் வந்தவர்கள் கூலிப்படையாக இருக்கலாம். மும்பை உள்ளிட்ட வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களா?. என்கிற ஆணித்தரமான சந்தேகம் புலன்விசாரணை டீமுக்கு உண்டு. மேலும் அவர்கள் கொலை நடந்த வீட்டிலிருந்து வேறு நகைகள், ஆவணங்களை எடுத்தச் சென்றுள்ளனரா? என்ற சந்தேகமும் இருக்கிறதாம். இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டாலும், அதற்கும் ஒரு சில நாட்களாகலாம் என்கிறன்றனர். தவிர இதில் வேறு யாருக்கும் தொடர்புள்ளதா என்பது கண்டறியப்பட வேண்டும் என தனிப்படையினருக்கு உத்தரவிட்டிருக்கிறார் நெல்லை மாநகர போலீஸ் கமிசனரான பாஸ்கரன்.
தவிர வீட்டில் மதிப்புள்ளவைகள் மற்றும் டாக்குமெண்ட்ஸ்கள் பற்றிய விபரங்களைச் சேகரிக்கத் தொடங்கிய தனிப்படை, கார்த்திகேயன், வாக்குமூலத்தில் தெரிவித்ததையும் தாண்டி, அவர்களுக்குள் வேறு ஏதாவது வலுவான காரணமிருக்கிறதா என்று துருவுகிறார்கள். கைதான கார்த்திகேயன் அழுத்தமானவன் மட்டுமல்ல. சரியான கிரிமினல் டைப். கொலைச் சம்பவம் நடந்த பிறகு பலசந்தேகங்கள் கிளம்பியது. குறிப்பாக உமா மகேஸ்வரி, சீனியம்மாள் பற்றிய தகவல் கிடைத்த உடனேயே நாங்கள் அவரது மகன் கார்த்திகேயனைக் கொண்டு வந்து நார்மலாகத்தான் விசாரித்தோம். கடுமை காட்டவில்லை. அவனுடைய பதிலில் திருப்தியுமில்லை அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவன் செல் நம்பரை மட்டும் வாங்கிக் கொண்டு சந்தேகப்படாமல் அனுப்பிவிட்டோம். விட்டுப் பிடித்தோம். ஆனால் அவன் எங்கள் ஷேடோவிலுமிருந்தான்.
உமாமகேஸ்வரியின் வீட்டுப் பகுதி மட்டுமல்ல பாளையிலுள்ள 5 செல் டவர்களிலிருந்து சென்ற ஒரு மாதத்திற்குட்பட்ட நம்பர்களைக் கலெக்ட் செய்தோம். அதை சைபர் க்ரைம் மூலம் தீவிரமாக அலசியபோதுதான், கார்த்திகேயன், உமா, மற்றும் அவரது கணவரோடு பலதடவை பேசிய க்ராசிங் சிக்னல் கிடைத்தது. கார் பற்றிய விபரமும் தெரியவர ஆதாரத்துடன் தூக்கியவனை விசாரிக்க வேண்டிய முறையில் விசாரித்தபோது மாட்டிக் கொண்டான்.
ரொம்பவும் டேலண்ட்டாகச் செய்ததாகச் சொல்லும் அவன் அழுத்தமானவன். இதில் வேறு எவருக்கும் தொடர்பிருக்கிறதா?. என்று விசாரணை போகிறது என்கிறார் மாநகர போலீஸ் கமிசனரான பாஸ்கரன்.
இதுபோன்ற கொலை ஒருவரால் இயலாது. மற்றொருவர் துணையின்றி இதுபோன்ற கொடூரக் கொலைகள் சாத்தியப்படாது. இது கூலிப்படையாகவும் இருக்கலாம் என்கிற சந்தேகமும் இருக்கிறது. மும்பையில் அண்டர் வேர்ல்டு டான்கள், கேரளாவில் கொட்டேஷன் கேங்க் போன்று கூலிப்படைகளிருப்பது மாதிரி, அந்த வகையான தொடர்புமிருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை செல்கிறது என்கிறார்கள்.
உறவுகள் தொடர்பின்றி, தனியாக வாழ்வது ஆபத்து உறவுகளோடு சகஜமான அணுமுறை இருக்க வேண்டும் அதுதான் அவர்களின் பாதுகாப்பு.
முன்னாள் மேயரான உமா மகேஸ்வரி தன் கணவரோடு தனியாக வசித்தவர். அவர், தன்னுடைய தாய் வழி, உடன் பிறந்தவர்களோடு சகஜமாகப் பேசியிருந்தாலே அந்த உறவினர்கள் வந்து போயிருப்பார்கள். அதுபோன்றதொரு உறவுமுறை பழக்கமிருந்தாலே, உமாமகேஸ்வரிக்கு பாதுகாப்பும்கூட. இதுபோன்ற சம்பவமும் நடந்திருக்க வாய்பில்லை. அவர் அதை அனுமதிக்காமலிருந்ததுதான் வினையாகிவிட்டது என்ற பேச்சும் இப்போது கிளம்பியிருக்கிறது.
அதுதான் கற்றுத் தரும் பாடமும் கூட...