ஊரடங்கு காலத்திலும் கொலை, கொள்ளை, சட்ட விரோத பொருட்கள் விற்பனை, கடத்தல் என சட்டத்திற்கு புறம்பான கிரிமினல் வேலைகள் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் நடக்கிறது.
தமிழகத்தில் குட்கா, பான் மசாலா, ஹான்ஸ் போன்ற புகையிலை பொருட்கள் தடை செய்யப்பட்டு பல வருடம் ஆகிவிட்டது. ஆனால் இந்த பொருட்கள் சாதாரண குக்கிராமத்தில் உள்ள கடைகள் வரை விற்பனை செய்யப்பட்டுக் கொண்டுதான் உள்ளது. பெரும்பாலும் வட மாநிலங்களிலிருந்துதான் இவைகள் தமிழகத்திற்கு இறக்குமதியாகிறது. இத்தொழிலின் மொத்த வியாபாரிகளாக இருப்பவர்கள் தமிழ்நாட்டில் வசிக்கும் வட மாநிலத்தை சேர்ந்த மார்வாடிகள்தான்.
ஊரடங்கு என்பதால் தமிழ்நாட்டுக்கு இறக்குமதி நூதன வடிவில் நடக்கிறது. அதில் ஒன்றுதான் இப்போது ஈரோட்டில் பிடிபட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தையடுத்த பண்ணாரி சோதனை சாவடியில் காவல்துறையினர் இன்று காலை சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கர்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்து வந்த பிக்கப் வேனை நிறுத்தி விசாரணை செய்தனர். அந்த வேனை ஓட்டி வந்த சுரேஷ் என்பவர் போலீசாரின் கேள்விகளுக்கு முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
அதில் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் வேனை சோதனை செய்தனர். அப்போது பூண்டு மூட்டைகளுக்கு நடுவே 20 பாக்ஸ் மற்றும் 8 மூட்கள் இருந்தன. அவற்றை பிரித்து பார்த்த போலீசாருக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவைகள் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் பான்மசாலா புகையிலை பொருட்கள் என தெரியவந்தது.
உடனடியாக அந்த வேனை பறிமுதல் செய்த காவல்துறையினர் வேனை ஓட்டி வந்த சுரேஷிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் கர்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்து எடுத்து வருவதாகவும், அதனை விற்பனை செய்ய மதுரைக்கு கொண்டு செல்வதாகவும் கூறியிருக்கிறார். இதேபோல் மேலும் ஐந்தாறு வண்டிகள் மற்ற ஊர்களுக்கும் சென்றுள்ளது என்ற அதிர்ச்சி தகவலையும் கூறிய அவர் இந்தப் பொருட்கள் யாரிடம் போய் ஒப்படைபீர்கள் என போலீஸ் கேட்டதற்கு யார் என்று தெரியாது வழியில் தொலைபேசி அழைப்பு வரும் சம்பந்தப்பட்ட நபர் வருவார் என்று மட்டும்தான் என்னிடம் கூறினார்கள் என கூறியிருக்கிறார்.
பிடிபட்ட இந்த புகையிலை பொருட்கள் பல லட்ச ரூபாய் மதிப்பு கொண்டதாம். போலீசார் வாகன ஓட்டுனர் சுரேஷ் மற்றும் உடன்வந்த தமிழ்வாணன் ஆகிய இருவரையும் கைது செய்து சத்தியமங்கலம் போலீஸ் ஸ்டேசனில் வைத்து விசாரணை செய்து வருகிறார்கள். பூண்டு மூட்டைகளுக்கு நடுவே இந்த தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் எந்தெந்த ஊர்களுக்கு இப்படி போதை பொருள் கடத்தப்பட்டு வருகிறது என்பதையும் தேடி வருகிறார்கள். உழைக்கும் மக்கள் வாழ்வாதாரத்திற்காக பரிதவிக்கும் இந்த கரோனா கால கட்டத்திலும் கடத்தல்காரர்கள் வாழ்க்கை வழக்கமானதாக உள்ளது.