Skip to main content

"ஏழையின் குரல் யாருக்கும் எட்டாதா..?" கதறி அழும் இளைஞனின் குடும்பம்...

Published on 19/02/2020 | Edited on 19/02/2020

பணம் படைத்தவர்கள் கொலை செய்தால் கூட அது குற்றமாகாதா? ஏழையின் குரல் யாருக்கும் எட்டவில்லையே... என பரிதவிக்கிறது மர்மமாக இறந்த ஒரு இளைஞனின் குடும்பம்.

 

erode textile case

 

 

ஈரோட்டில்  லுங்கி ,பனியன் தயாரித்து விற்பனை செய்யும் பிரபல தனியார் நிறுவனம் ஒன்று ஈஸ்வரன் கோவில் வீதியில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். அந்த நிறுவனத்தில் சூரம்பட்டி பகுதியைச்சேர்ந்த ஒருவர்  ஊழியராக வேலை செய்து வந்தார்.  இவர் மார்க்கெட்டிங் பணியோடு வெளியிடத்தில் விற்பனையான ஜவுளிக்கான கலெக்ஷன் பணத்தை வாங்கிக் கொண்டு வந்து அந்த  நிறுவனத்திடம் ஒப்படைக்கும் வேலையையும் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு இவர் அந்த நிறுவனத்தில் இருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகச் சொல்லி மற்ற ஊழியர்கள் அந்த இளைஞரை சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள். அங்கு சிகிச்சை பலனின்றி  சிறிது நேரத்தில் அந்த இளைஞர் பரிதாபமாக இறந்துவிட்டதாக கூறப்பட்டது. பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

ஆனால் இறந்த ஊழியர் அந்த நிறுவனத்தின் பணத்தை கையாடல் செய்துவிட்டதற்காக நிறுவன மேலாளர் உட்பட 5 பேர் அவரை தாக்கியதால் மயங்கி விழுந்து விட்டதாகவும், அதன் பிறகு  அவருக்கு மாரடைப்பு என்று மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும், அங்கு அவர்  இறந்ததை உறுதிப்படுத்தியதாகவும்  கூறப்படுகிறது.  இதனால் அந்த நிறுவன ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

பிரேத பரிசோதனை முடிவு வரட்டும் என்கிறார்கள். ஆனாலும் அது பெரிய நிறுவனம், சில போலீஸ் உட்பட பல அதிகாரிகள் அந்நிறுவனத்திற்கு சாதகமானவர்களே என்றும் இறந்த இளைஞனின் குடும்பத்தையும் தேவையானதை வழங்கி சமாதானப்படுத்தி விடுவார்கள் எனவும் அங்குள்ள அப்பாவி தொழிலாளர்கள் கூறுகிறார்கள். நீதியை வளைக்க தெரிந்த வல்லவர்கள் இருக்கும் வரை ஏழைகளின் கன்னீரும் வற்றாது.

 

 

சார்ந்த செய்திகள்