ஒவ்வொரு ஊரிலும் அம்மன் கோயிலில் தீ மிதி என்கிற குண்டம் திருவிழா என்றாலே ஆண்களை விட பெண்கள் பக்தி பரவசத்துடன் அதிக அளவில் கலந்து கொள்வது வழக்கம். அப்படித்தான் இன்று ஈரோட்டிலும் நடந்தது. ஈரோடு கோட்டை பத்திரகாளியம்மன் கோவில் இங்கு பிரசித்தி பெற்றது.
இதன் திருவிழா சென்ற 26 ஆம் தேதி கொடிமர பூஜையுடன் தொடங்கியது. திங்கட்கிழமை பூச்சாட்டுதல் செவ்வாய்க்கிழமை காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம், புதன்கிழமை இரவு அக்னி கபாலம், வியாழக்கிழமை இரவு குண்டம் பற்ற வைத்தல் என ஒவ்வொரு நாளும் நிகழ்ச்சிகள் நடக்க, இதை தொடர்ந்து இன்று காலை பத்திரகாளி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு குண்டம் இறங்கும் நிகழ்ச்சி தொடங்கியது.
இதில் ஏராளமான பெண்கள், சிறுவர்கள், ஆண்கள் உட்பட ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கலந்துகொண்டு குண்டம் இறங்கினார்கள். இதை தொடர்ந்து கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து மாவிளக்கு பூஜையும் நடைபெற்றது.