ஓயாத கண்ணீர் காட்சிகள் என்றால் அது புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் இன்றைய நிலைதான். இந்தியா முழுக்க புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது பிறப்பிடம் நோக்கி கால்நடையாக நடந்து செல்லும் மிகப்பெரிய சமூக அவலம் தொடர்ந்து நடந்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில் வாழும் மக்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக ஊரு விட்டு ஊரு, மாவட்டம் விட்டு மாவட்டம், மாநிலம் விட்டு மாநிலம் என கடந்த 20 வருடங்களாக பிழைப்பை தேடி, அது எங்கே கிடைக்கிறதோ அங்கு சென்று தங்களது உழைப்பை கொடுத்து வாழ்ந்து வந்தவர்கள்தான் இந்த புலம்பெயர் தொழிலாளர்கள்.
குறிப்பாக தமிழ்நாட்டில் மேற்குவங்க மாநிலம் தொடங்கி குஜராத், உ.பி., ராஜஸ்தான், ஜார்கண்ட், சதீஸ்கர், பீகார், ஒடிசா என வட மாநிலத்தில் உள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் கட்டுமான பணியிலும் பின்னலாடை உற்பத்தி மேலும் பல தொழில் சார்ந்த நிறுவனங்களில் தொழிலாளிகளாக பணிபுரிந்து வருகிறார்கள். ஒரு கட்டத்தில் தொழில் துறையில் தமிழ்நாடு வட மாநிலத்தவரின் கையில் சென்று கொண்டிருக்கிறது என்ற பிரச்சாரமும் எழுந்தது. அந்த அளவு வெளிமாநில தொழிலாளர்களின் உழைப்பு தமிழ்நாட்டுக்கு மிகவும் தேவைப்பட்டது. ஆனால் இந்த கொடிய கரோனா என்கிற வைரஸ் ஒட்டுமொத்த மனித சமூகத்தையே புரட்டிப் போட்டுவிட்டது. மத்திய மாநில அரசுகள் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு என தொடர்ந்து ஊரடங்கு உத்தரவை திரும்ப திரும்ப போட்டு முடக்கி வருகிறது.
வாழ்விடமாக இருந்த தொழிற்சாலைகளின் கதவுகள் இரும்புக் கம்பிகளால் பூட்டப்பட்டு விட்டது. தொழில் நிறுவனத்தை நடத்தி வரும் உரிமையாளர்களும் மெல்ல,மெல்ல இனிமேல் உங்களுக்கு கொடுக்க எங்களிடம் எதுவும் இல்லை என கைவிரித்து விட்டார்கள்.
என்ன செய்வார்கள் இந்தப் புலம்பெயர் தொழிலாளர்கள்? பசி, பட்டினியால் இறப்புதான் தங்களுக்கு முடிவோ? என்ற அச்சத்தில் அப்படி நேருமானால் அதுதான் பிறந்த பூமியிலேயே இருக்கட்டும் என வேறு வழியே இல்லாமல் இந்திய மூலைகளில் இருந்து தங்களது இருப்பிடம் நோக்கி நடக்கத் தொடங்கி விட்டார்கள். இது ஒரு நாள், இரண்டு நாள் அல்ல, கடந்த 50 நாட்களாக இந்தியாவில் இவர்களின் நடைபயணம் மிகுந்த அவலமாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
நமது மத்திய அரசோ சாதாரண மக்கள் கணக்கிட முடியாத தொகைகளை மிக இயல்பாக அறிவிக்கிறது. 20 லட்சம் கோடி என்கிறார்கள். இப்போது இவர்களுக்கு தேவை புலம்பெயர்ந்து வந்த இடத்தில் வசிப்பிடம் அல்லது வாழ்வதற்கான உணவு இல்லை என்ற நிலையில், இனிமேல் எங்கள் வாழ்வாதாரம் நாங்கள் உழைக்க வந்த இடத்தில் இல்லாமல் போய்விட்டதால், எங்களை நாங்கள் பிறந்த இடத்திற்கே கொண்டு போய்விடுங்கள் என்று தான் கேட்கிறார்கள்.
எத்தனையோ லட்சம் கோடி அறிவிப்புகள் தினம் தினம் காதில் வந்துவிழுகிறது. இரண்டு, மூன்று நாள் ரயில் பயணத்தில் சென்றால் அவர்கள் வசிப்பிடம் வந்துவிடும். இந்த நிலையை மத்திய அரசு எடுக்கவே இல்லை. மனிதர்களை பற்றி சிந்திக்கின்ற எத்தனையோ அமைப்புகள் எதிர்க்கட்சிகள் மன்றாடி கேட்டு விட்டது, அவர்களை அவர்களது இடத்திற்கே கொண்டு போய்விடுங்கள் என்று. ஆனால் மனம் இரங்கவில்லை அரசுகள். ஆனால் கணக்கு காட்ட இந்த அரசாங்கம் சில ஊர்களில் மட்டும் சொந்த ஊருக்கு அனுப்புகிறோம் என ரயில் காட்சிகளை வெளியிட்டு வருகிறார்கள். ஆனாலும் இன்னும் பல லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் இருப்பிடம் செல்ல வேண்டும் என மன்றாடுகிறார்கள். சிலர் நடைபயணமாக செல்வதும் பலர் இருக்கும் இடத்திலேயே அதிகாரிகளிடம் எங்களை எங்கள் ஊருக்கு அனுப்புங்கள் என்று கெஞ்சுவதும் நடந்து கொண்டே இருக்கிறது. அப்படித்தான் ஈரோட்டில் இன்று ஒரு பதட்டமான சம்பவம்.
ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் புலம்பெயர் தொழிலாளர்கள் பல நூற்றுக்கணக்கானோர் தங்கி உள்ளார்கள். இந்த ஊரடங்கு தொடங்கிய நாள் முதல் அவர்கள் தங்களது இருப்பிடம் நோக்கி செல்லலாம் என எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தார்கள் முடியவில்லை. மாநில அரசுகள் அறிவித்தபடி அரசு நிர்வாகத்திற்கு தங்களை தங்கள் ஊருக்கு அனுப்பக்கோரி விண்ணப்பம் செய்து பார்த்தார்கள். ஆனால் அதுவும் நடக்கவில்லை. இதனால் பொறுமை இழந்து இன்று வீதிக்கு வந்த அவர்கள், ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து எங்களது கோரிக்கையை வைக்கிறோம் என ஒன்று கூடி வந்தார்கள்.
அப்படி வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி முதலில் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது, ''உங்கள் கோரிக்கையை நாங்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கூறி விடுகிறோம், இப்போது நீங்கள் கலைந்து செல்லுங்கள்'' என போலீசார் எச்சரிக்கை செய்ய, ''ஐயா நாங்கள் மாவட்ட ஆட்சித் தலைவரை நேரில் சந்தித்தால் நிம்மதியாக கலைந்து செல்கிறோம்'' என கூறினார்கள். ஆனால் போலீஸ் விடவில்லை. பேச்சுவார்த்தை சுமுகமாக முடியாததால் அந்த புலம்பெயர் தொழிலாளர்கள் கூட்டத்தின் மீது லேசாக தடியடி நடத்தினார்கள் ஈரோடு போலீசார். வேறு என்ன வழி இல்லாமல் போலீஸ் அடித்து உதைத்து விடுமோ என்ற பயத்தில் வேகமாக சிதறி ஓடினார்கள் அவர்கள். இந்த மண்ணில் வந்து உழைப்பை செலுத்தி எந்த தொழிலை வளர்த்தார்களோ அந்த மண்ணிலேயே அவர்கள் கண்ணீர் விடும் அவலம் ஏற்பட்டுள்ளதை நினைக்கும்போது வேதனையாகத்தான் உள்ளது.