
ஈரோடு, மணிக்கூண்டு பகுதியில் பல வருடங்களாக ‘நேதாஜி தினசரி மார்கெட்’ செயல்பட்டுவந்தது. இந்நிலையில், கரோனா வைரஸ் பரவல் சென்ற வருடம் ஏற்பட்டபோது, அந்த மார்கெட் மூடப்பட்டு, தற்காலிகமாக வ.உ.சி. பூங்கா வளாகத்தில் செயல்பட தொடங்கியது. அது அப்படியே இரு வருடங்களாக நீடித்துவருகிறது.
இங்கு 800க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள், 100க்கும் மேற்பட்ட பழக்கடைகள் செயல்பட்டுவருகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான, பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் இங்கு வருவதால் எப்போதும் காய்கறி மார்க்கெட் பரபரப்பாக காட்சியளிக்கும். காய்கறி மார்க்கெட்டில் குத்தகைதாரர் ஒவ்வொரு வியாபாரியிடமும் வாடகை மற்றும் அவர்கள் கொண்டுவரும் பொருட்களுக்கான சுங்க கட்டணம் எவ்வளவு வசூலிக்க வேண்டும் என மாநகராட்சி சார்பில் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
ஆனால், கடந்த சில மாதங்களாக மாநகராட்சி நிர்வாகத்தால் நிர்ணயிக்கப்பட்ட சுங்க கட்டணத்தைவிட இதன் ஒப்பந்ததாரர் கூடுதல் கட்டணம், கூடுதல் வாடகை வசூலிப்பதாக வியாபாரிகள் தொடர்ந்து புகார் கூறிவந்தனர். இது தொடர்பாக வியாபாரிகள் ஈரோடு கலெக்டர் அலுவலகத்திலும், மாநகராட்சி அலுவலகத்திலும் புகார் தெரிவித்திருந்தனர். ஆனால், இதுவரை நடவடிக்கை எதுவும் இல்லாததால் நேற்று (05.07.2021) காலை ஈரோடு பஸ் நிலையம் அருகே உள்ள ‘ஸ்வஸ்திக் கார்னர்’ பகுதியில் 500க்கும் மேற்பட்ட காய்கறி வியாபாரிகள் கூடுதல் சுங்க கட்டணம், வாடகை வசூலைக் கண்டித்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், அவர்கள் கொண்டுவந்த காய்கறிகளை ரோட்டில் கொட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தத் திடீர் போராட்டத்தால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.
இதுகுறித்து போலீசாருக்குத் தகவல் கிடைக்க டவுன் டி.எஸ்.பி. ராஜு சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது வியாபாரிகள், “ஒரு கடைக்கு தினசரி 16 ரூபாய் வாடகை நிர்ணயிக்கப்பட்ட நிலையில், ஒப்பந்ததாரர் 50 ரூபாயும், காய்கறி பாக்ஸ் ஒன்றுக்கு 7 ரூபாய்க்குப் பதில் 30 ரூபாயும் வசூலிக்கிறார். வாகன அனுமதி கட்டணமும் பல மடங்கு உயர்த்தி வசூலிக்கப்படுகிறது” என பல புகார்களைத் தெரிவித்தனர். “வியாபாரிகள் பணத்தை உடனடியாக கட்டவில்லை என்றால் அவர்களின் கடையை உடனே காலி செய்துவிடுவது போன்ற நடவடிக்கைகளும் நடக்கிறது. அதேபோல், கடுமையான மிரட்டல்களும் வருகின்றன. இந்த வியாபாரத்தில் கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்தே எங்கள் குடும்பத்தை நாங்கள் நடத்திவருகிறோம். ஆனால், இவர்கள் திடீரென வாடகையை உயர்த்திவிட்டனர். இதற்கு ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டனர்.

இதற்கு டவுன் டி.எஸ்.பி. ராஜு, “உங்கள் கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். நீங்கள் எவ்வளவு வாடகை கொடுக்க வேண்டும், சுங்க கட்டணம் எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பது குறித்து மார்க்கெட் பகுதியில் மாநகராட்சி சார்பில் போர்டு வைக்கப்படும்.” எனத் தெரிவித்தார். அதை ஏற்றுக்கொண்ட வியாபாரிகள், சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். சாலை மறியல் தகவல் கிடைத்து அங்கு வந்த ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா வியாபாரிகளிடம் பேசினார். அமைச்சர் சு. முத்துச்சாமியிடம் பேசி இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தார்.
இந்த மார்கெட்டில் கடை வாடகை, சுங்க கட்டணம் வசூலிக்க ஏலம் எடுத்துள்ள குத்தகைதாரர் குறிஞ்சி சிவக்குமார் என்பவர், திமுகவில் விவசாய அணி மாநில இணை ஒருங்கிணைப்பாளராக உள்ளார். இவர் குறித்த இந்த விவகாரம் திமுக தலைமைக்கும் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.