ஈரோடு மாவட்டத்தில் வீரப்பன்சத்திரம், அசோகபுரம், சூளை, மாணிக்கம்பாளையம், சித்தோடு, சூரம்பட்டி, லக்காபுரம் போன்ற பல்வேறு பகுதிகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் ரயான் துணி ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் ரயான் துணிகள் மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட பல வட மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
சமீப காலமாக, ரயான் நூலின் விலை கடுமையான அளவுக்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக, தீபாவளி சமயத்தில் ரூ.150க்கு விற்ற ஒரு கிலோ ரயான் நூலின் விலை, டிசம்பர் இறுதியில் ரூ.230-ஆக அதிகரித்துள்ளது. அதாவது, கிலோவுக்கு ரூ.80 வரை நூல் விலை அதிகரித்துள்ளது. ஆனால், ரயான் துணிகளின் விலை அதற்கேற்ப உயரவில்லை. இதனால், ரயான் ரகம் உற்பத்தி செய்துவரும் விசைத்தறியாளர்களுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டு வருவதாகக் கூறி தொடர்ந்து அரசிடம் பல வகையில் முறையிட்டு வந்தனர்.
ஆனால், நூல்விலை உயர்வு கட்டுப்படுத்தப்படவே இல்லை. இதனால் 12ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை 11 நாட்களுக்கு உற்பத்தியை நிறுத்திவைக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்ட்ரைக் காரணமாக தினசரி சுமார் 7.5 கோடி ரூபாய் மதிப்பிலான 24 லட்சம் மீட்டர் ரயான் துணியின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க மாநிலச் செயலாளர் சின்னசாமி கூறுகையில், "நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்றுவந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள், உற்பத்தி நிறுத்தத்தால் வேலையிழந்து, வருமானமிழந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆகவே, மத்திய, மாநில அரசுகள் உடனடியாகத் தலையிட்டு ரயான் நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், சீரான விலையில் தொடர்ந்து நூல் கிடைக்கவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.