Skip to main content

கொலை செய்து எரிக்கப்பட்ட இளைஞர்... ஈரோட்டில் பரபரப்பு....

Published on 08/08/2020 | Edited on 08/08/2020

 

Erode Karungalpalayam

 

கரோனா காலத்திலும் கொலை போன்ற க்ரைம் சம்பவங்கள் குறைந்தபாடில்லை.

 

ஈரோடு கருங்கல்பாளையம் கணபதி நகர் பகுதியில் மூன்று குப்பை சேகரிக்கும் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. இந்தக் குப்பைத் தொட்டி அருகே இன்று காலை சுமார் நாற்பது வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் உடல் பாதி எரிக்கப்பட்ட நிலையில் கிடந்துள்ளது. கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

 

சம்பவ இடத்திற்கு டவுன் டி.எஸ்.பி. ராஜு, ஏ.டி.எஸ்.பி. பொன் கார்த்திக் குமார், இன்ஸ்பெக்டர்கள் சிவகுமார், பன்னீர்செல்வம் ஆகியோர் வந்து பார்வையிட்டனர். அந்த வாலிபரின் உடல் முகம் முதல் இடுப்பு வரை எரிந்த நிலையில் இருந்திருக்கிறது. யார் அவர்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எதற்காக இக்கொலை நடந்துள்ளது என்ற விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை. 

 

அந்த இடத்திற்கு வந்த போலீஸ் மோப்ப நாய் சிறு தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. அடுத்து போலீசார் அந்த இளைஞர் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளிகள் வேறு எங்கேயோ வைத்துக் கொலை செய்து விட்டு உடலை எரித்து இங்கு வந்து வீசிச் சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். உடல்கிடந்த இடம் அருகே தீ வைத்து எரிக்கப்பட்டதற்கான எந்தத் தடயங்களும் இல்லை. கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

அந்தப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்தும் வருகின்றனர். ஏற்கனவே ஈரோட்டில் கருங்கல்பாளையம் பகுதி என்றால் அது க்ரைம் சம்பவங்கள் அதிகம் நடக்கும் பகுதி என்னும் நிலையில் இக்கொலை சம்பவம் ஈரோட்டில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்